பதற்றமாக இருக்கும்போது உடலில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அது நம்மை கவனமாக இருக்கவும், பிரச்னைகளை எதிர்கொள்ள துணையாகவும் உடலில் வெவ்வேறு பகுதிகளில் பல மாற்றங்கள் ஏற்படவும் செயல்படுகிறது. பயப்படக்கூடிய சூழ்நிலைகளில் மிகவும் கவனமாகவும், தெம்புடனும் இருப்பது அவசியம். கவனத்தை அதிகரிப்பதற்கு மூளைக்கும், தெம்பை அதிகரிப்பதற்கு தசைகளுக்கும் இரத்த ஓட்டம் அதிகமாகி செல்கிறது. அதனால் வயிற்றுக்கும் குடலுக்கும் இரத்த ஓட்டம் குறைந்துவிடுகிறது. இதனால் உணவு ஜீரணிக்கும் சக்தி குறைகிறது.
இதனால் வயிறு புரட்டுவது போல் தோன்றும். சில நேரங்களில் அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு இதனாலேயே வருகிறது. பதற்ற நிலையில் தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் நுரையீரல் வேகமாக இயங்குவதால் மூச்சுவிடுவது சிரமமாகிறது. பதற்ற நிலையில் மூளை, தசைகள் போன்ற இடத்திற்கு இரத்தத்தை அதிகமாக செலுத்துவதற்காக இதயம் வேகமாக இயங்குகிறது. இதனால் ரத்த கொதிப்பும் நெஞ்சு படபடப்பும் வருகிறது.
பயம் மற்றும் பதற்றமான சூழ்நிலையை எதிர்கொள்ளவோ அல்லது விட்டு விலகவோ உடலில் அதிக சக்தி தேவைப்படுகிறது. அதிகமான சக்தியை பயன்படுத்தும்போது உடல் சூடாகின்றது. சூடான உடலை குளிர்ச்சிப்படுத்த வேண்டும். உடல் குளிர்ச்சியாவதற்கு அதிகம் வியர்க்க வேண்டும். பதற்ற நிலையில் அதிகம் வியர்ப்பதற்கு இதுவே காரணமாகும். மன பதற்றமான சூழ்நிலைகளில் மூச்சை வேகமாகவும், மேலோட்டமாகவும் விடுவதால் இரத்தத்தில் கரியமில வாயு குறைகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிக்கின்றது.
இது இரத்த குழாய்களை உடல் முழுவதும் குறிப்பாக மூளை நரம்பு மண்டலத்தில் உள்ள ரத்த குழாய்களை சுருங்க செய்கிறது. இதன் காரணமாக மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைகிறது. இதன் விளைவாக மூளைக்கு குறைந்த அளவு பிராண வாயு செல்கிறது மற்றும் ரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைகிறது. இதனால் உடலில் ஊசி குத்துவது போலவும், கை, கால் மரத்துப்போவது போலவும் மற்றும் நரம்பு இழுப்பது போன்ற உணர்வுகளும் ஏற்படும்.
தலை சுற்றல், தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு, இதய துடிப்பு அதிகரித்தல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். ஒரு முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் முன் நமது தசைகள் இறுகுவதை உணர மாட்டோம். காரியத்தை முடித்த பின் முதுகுவலியோ கழுத்து பின்புறம் வலியோ வாட்டும். பயத்தில் தசை இறுகுவதே இதற்கு காரணமாகும். தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.