இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் நேற்று முன்தினம் முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளல் உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா சாலை ஊழியர்களும் நேற்று முன்தினம் முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.