கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ குணவர்தன நாடாளுமன்றத்தில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக விடுத்த எச்சரிக்கையை அடுத்து இராணுவ ஆட்சிக்கான வாய்ப்புகள் இருக்கிறதா இல்லையா என்பதே அரசியலில் பெரும் விவாதக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலா தினேஸ் குணவர்தன இந்த ஆபத்தான விடயத்துக்குள் காலடியை எடுத்து வைத்து விட்டார்.
அதனால் தான் கூட்டு எதிரணியைச் சேர்ந்த எவரும் அவரது கருத்துக்கு ஆதரவாக வாய் திறக்காமல் மௌனமாக இருக்கிறார்கள்.
மகிந்த ராஜபக்சவோ, விமல் வீரவன்ஸவோ, உதய கம்மன்பிலவோ, வாசுதேவ நாணயக்காரவோ, கூட தினேஸ் குணவர்தனவின் கருத்துக்கு விளக்கம் கொடுக்கவோ அல்லது அதற்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு செல்லவோ இல்லை.
காரணம், இந்த விடயத்தை முன்னிறுத்தி மீண்டும் அரசியல் செய்ய முனைந்தால், நாட்டு மக்கள் மத்தியில் இராணுவப் புரட்சியை கூட்டு எதிரணி தூண்டி விடுகிறது என்ற கருத்து வலுப்பெறும்.
இன்னொரு பக்கத்தில் இலங்கையின் அரசியலில் தலையீடுகளைச் செய்யாமலேயே இருந்து வரும் இராணுவத்துக்குள்ளேயும் அதிருப்தியை ஏற்படுத்தும்.
இதனால் தான் கூட்டு எதிரணி மேலதிகமாக எதையும் உளறிக் கொட்டாமல் அமைதியாக இருக்கிறது.
ஆனால் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தினேஸ் குணவர்தனவையும் கூட்டு எதிரணியையும் தாராளமாகவே வறுத்தெடுக்கிறார்கள்.
இந்தநிலையில் தான் நாம் இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டியுள்ளது.
தெற்காசியாவில் பாகிஸ்தான், பங்களாதேஷ் தவிர வேறெந்த நாடுகளிலும் இதுவரையில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு சென்றதில்லை.
இந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் மாத்திரமே இந்த விடயத்தில் விதிவிலக்கான நாடுகளாக இருந்து வருகின்றன.
அதிலும் பாகிஸ்தான் மாத்திரமே இன்னமும் உறுதியான ஜனநாயகத்துக்குத் திரும்பாத நாடாக இருக்கிறது.
இங்கு எப்போதெல்லாம் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள், தமது உறுதியான அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த முனைகிறார்களோ அப்போதெல்லாம் இராணுவம் அவர்களை பதவியில் இருந்து அகற்றத் தவறுவதில்லை.
இன்றும் கூட ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதமரும், ஜனாதிபதியும் அதிகாரத்தில் இருந்தாலும், இராணுவமே அரசியலில் மேலாதிக்கம் செலுத்துகிறது.
ஆனால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஏனைய தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரையில் அத்தகைய நிலை ஒருபோதும் இருந்ததில்லை.
இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தை 1977ம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கம் நடைமுறைப்படுத்திய போது கூட, இராணுவப் புரட்சி செய்ய முயற்சிக்கவில்லை.
இந்தியா போன்ற நாடுகள் இராணுவப் புரட்சி வெற்றியளிக்காது என்பதற்கு முக்கியமான காரணம் பல மொழிகள் பேசப்படும். பல இனங்களைக் கொண்ட நாடு என்பதும் ஒன்று.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் இராணுவம் பெரும்பாலும் ஒரே இனத்தை ஒரே மொழியைப் பேசுவதாக இருப்பதானது இராணுவப் புரட்சிக்கு சாதகமானதாகவே இருந்தாலும், அதிகாரத்தைப் பிடிக்கும் நிலை ஒருபோதும் இராணுவத்துக்குக் கிடைத்ததில்லை.
அதற்காக இலங்கையில் இராணுவப் புரட்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அர்த்தமில்லை.
1962ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் இருந்தபோது அவரது அரசாங்கத்தை பதவியிறக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஒப்பரேசன் ஹோல்ட் பாஸ்ட் என்ற சங்கேதப் பெயரில் தீட்டப்பட்ட இந்த சதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டது.
அதுபோலவே 1966ம் ஆண்டும் இன்னொரு சதித்திட்டம் தீட்டப்பட்டதாயினும் அதுவும் செயற்படுத்தப்படுவதற்கு முன்னரே முறியடிக்கப்பட்டது.
இலங்கையில் இராணுவப் புரட்சிக்கான திட்டங்கள் முன்னரும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் அவை செயல்நிலைக்கு வர முன்னரே தோற்கடிக்கப்பட்டன.
அதற்குப் பிறகு 1987ல் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன, இராணுவப் புரட்சி ஒன்று ஏற்பட்டால் அதனை முறியடிக்க உதவி தர வேண்டும் என்று இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியிடம் கேட்டுக் கொண்டார்.
அதுபோலவே 2010ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவும் இராணுவப் புரட்சி ஒன்றை சரத் பொன்சேகா மேற்கொண்டால் உதவ வேண்டும் என்று இந்தியாவிடம் கேட்டிருந்தார்.
ஆனால் அத்தகைய எந்த முயற்சிகளும் இடம்பெற்றிருக்கவில்லை.
போர்க்காலத்தில் போருக்குப் பின்னரும் எத்தகைய சூழ்நிலையிலும் இலங்கை அரசாங்கத்தின் சொல்லை இராணுவம் மதித்தே வந்திருக்கிறது. இராணுவ ஒழுக்கத்தை மீறும் துணிச்சல் எந்த இராணுவ அதிகாரிக்கும் வந்ததில்லை.
கடந்த வாரம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தன இதனைத் தான் கூறியிருந்தார். இராணுவத்தை அரசியல் நலன்களுக்குப் பகடைக்காயாக்க வேண்டாம் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும் அரசாங்கம் ஒரு இராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை செய்திருக்கும் என்றே நம்பலாம்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அரசாங்கத்தின் எல்லா செயற்பாடுகளும் இராணுவத்தின் எல்லா மட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருக்கவில்லை.
அவ்வாறு முரண்பாடான கருத்துடையோர் சதி முயற்சிகள் எதையும் நிறைவேற்றக் கூடும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில் அரசாங்கத்தையும் தலைவர்களையும் பாதுகாப்பதற்கு பொதுவாக எல்லா நாடுகளிலும் ஒரு இரகசியக் கட்டமைப்பு உருவாக்கப்படுவது வழக்கம்.
இலங்கையிலும் அதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதேவேளை, இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்பட்டால் அல்லது இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்தால் அது வெளிநாடுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும். எத்தகைய எதிர்விளைவுகள் உருவாகும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
இலங்கையில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதையோ, அரசாங்கம் தோற்கடிக்கப்படுவதையோ, இந்தியாவோ, அரெிக்காவோ விரும்பாது.
இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கையில் உறுதியான ஆட்சி நிலவ வேண்டும் என்பதே அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் நிலைப்பாடாகும்.
இலங்கையில் இராணுவம் அதிகாரத்துக்கு வந்தால், அது தெற்காசியப் பிராந்தியத்துக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதை இந்தியா கவனத்தில் கொள்ளும்.
பாகிஸ்தானின் இராணுவ அதிகாரத்தினால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா தான். எனவே இலங்கையிலும் அத்தகையதொரு நிலை ஏற்பட்டு மற்ற நாடுகளுக்கு அது ஊக்கமாக அமைந்து விடுவதை இந்தியா விரும்பாது.
எனவே எத்தகைய இராணுவப் புரட்சி மேற்கொள்ளப்பட்டாலும் இந்தியா அதில் தலையீடு செய்யும். அரசாங்கத்தைக் காப்பாற்ற முயற்சிக்கும்.
ஏற்கனவே 1988ம் ஆண்டு மாலைதீவில் ஒரு இராணுவப் புரட்சி ஏற்பட்ட போது இந்தியா தனது படைகளை அனுப்பி அந்த அரசாங்கத்தைக் காப்பாற்றியது.
அதுபோலவே இலங்கையைக் காப்பாற்றவும் இந்தியா தயங்காது. அமெரிக்காவும் கூட அத்தகையதொரு நிலையில் தேவையான படைபலத்தை பயன்படுத்த முயற்சிக்கலாம்.
அதைவிட இந்தியா அமெரிக்காவின் எதிர்ப்புகளையும் தாண்டி, ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய எந்த தரப்பினாலும் சர்வதேச ஆதரவை தக்கவைத்துக் கொள்ள முடியாது.
சர்வதேச ஆதரவு இல்லாமல் இலங்கையால் இலங்கையால் செயற்பட முடியாது. எனவே சர்வதேச ஆதரவு என்பது முக்கியமானது.
இராணுவ ஆட்சி ஒன்றுக்கு உதவக்கூடிய நிலையில் உலகின் எந்த நாடும் இருக்காது. சீனா கூட அதற்கு அங்கீகாரம் அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
இப்படியான ஒரு நிலையில் இராணுவ அரசாங்கம் ஒன்றினால் தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பியோடும் நிலை ஏற்படும்.
அதற்கு அப்பால் இத்தகைய இராணுவப் புரட்சி ஒன்று நிகழுமேயானால் அது சர்வதேச தலையீடுகளுக்கு வழிவகுப்பதாக இருக்கும். என்பதுடன் தமிழர் பிரச்சினை விடயத்திலும் வெளித் தலையீடுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, அரசாங்கத்தின் மீது எந்தளவுக்கு தான் அதிருப்தியைக் கொண்டிருந்தாலும் இலங்கை இராணுவம் சகித்துக் கொள்ள முனையுமே தவிர சீறிப்பாய எத்தனிக்காது.
இப்படியான ஒரு சூழலில் இராணுவ ஆட்சி ஏற்படுவது என்பது இலங்கையில் மிகமிக அரிதான ஒன்றாகவே இருக்க முடியும்.
ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும். ஒரு சூழலில் இராணுவ ஆட்சி பற்றிய பீதியை உருவாக்கியுள்ளமையானது கூட்டு எதிரணியின் அரசியல் வங்குரோத்து நிலையைத் தான் வெளிப்படுத்துகிறது.