உலகில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் வெள்ளம், அனல்காற்று ஆகிய இயற்கை விளைவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் இருக்கின்றது என்று பிரித்தானியாவின் முன்னாள் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் கிங் தெரிவித்துள்ளார்.
அந்த விளைவுகள், ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்கூட்டியே நேர்வதாக அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பிரித்தானியா தனது பருவநிலை மாற்றம் குறித்த இலக்குகளைப் பத்து ஆண்டுகள் முன்கூட்டியே நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளவில் வெப்பம் அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனால், இவ்வளவு வேகமாக அது உயருமென்றும், இத்தனை வெள்ளப் பெருக்குச் சம்பவங்கள் குறுகிய காலத்தில் இடம்பெறும் என்றும் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனால், ஐக்கிய நாடுகளின் தட்பவெப்பநிலைப் பிரிவுத் தலைவர், பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களில் “அச்சுறுத்தல்” என்னும் வார்த்தை இளைய சமுதாயத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தலாம் என கவலை வெளியிட்டார். இருப்பினும், அத்தகைய கடுமையான வார்த்தைகள் அவசியம்தான் என்பதை ஆய்வாளர்கள் சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இல்லாத பட்சத்தில், பருவநிலை மாற்றம் குறித்து யாருக்கும் போதிய அக்கறையோ, விழிப்புணர்வோ ஏற்படாது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பருவநிலை மாற்றத்தின் வேகமான விளைவுகள் குறித்து ஆய்வாளர்களே அச்சமடைந்துள்ளனர் என்பதுதான் உண்மை என்று அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.