அதிபர் சேவைக்கானநியமனப் பட்டியலில் இலங்கை முழுவதுமாக 34 முஸ்லிம்கள் தெரிவாகி இருந்ததை பட்டியலிட்டிருந்தேன்.
இறுதியாக 155 முஸ்லிம்கள் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அதிலிருந்து 34 பேர் தெரிவாகி முடிவு வெளியாகி உள்ளது.
எழுத்துப் பரீட்சை புள்ளியும் நேர்முகப்பரீட்சைப் புள்ளியும் சேர்த்தவாறு இறுதிப் புள்ளி விபரம் கூட வெளியிடப்படாத நிலையில் இந்த ஆட்சேர்ப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பட்டியலில் உள்ள 1858 பேரில் முஸ்லிம்கள் 34 உளளடங்கலாக தமிழ் தரப்பில் எப்படியும் 160 பேருக்குள்தான் தெரிவாகி இருக்கிறார்கள் மீதி 1700 பேரும் சிங்களச் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
பட்டியலை நோக்கிய போது முதல் 1000 பேருக்குள் முஸ்லிம்களில் 8 பேரின் பெயர்தான் காணப்பட்டது.
மிக வெளிப்படையாக இந்த நியமனத்தில் இனவாதம் தென்படும் வகையில் அநியாயம் நிகழ்ந்திருக்கிறது.
கடந்தகால அதிபர் நியமனங்களில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய அனைந்து முஸ்லிம் நபர்களும் நியமனம் பெற்றுவந்த வரலாற்றில் இது தலைகீழாக மாறிய ஒரு திட்டமிட்ட சதியைச் செய்திருக்கிறது.
இனரீதியாகவோ மொழிரீதியாகவோ இலங்கை பொதுச் சேவை நியமனங்கள் அமையாது என்ற சட்டத்தின் பிரகாரம் எழுத்துப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை புள்ளிகளின் அடிப்படையில் நியமனங்கள் வரிசைப்படுத்தப்படுகிறது.
மேற்படி தரப்படுத்தலில் சிங்களவர் தமிழர் முஸ்லிம் என எல்லோரையும் உள்ளடக்கிய புள்ளி மதிப்பீட்டில் உள்ள நேர்மைத் தன்மையில் எந்தளவுக்கு உண்மைத் தன்மை இருக்கிறது.
உள்ளே என்ன நடக்கிறது என்பதில் யாரும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாத நிலையில் சிறுபான்மைச் சமூகத்திற்கு பெரும் அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு இந்த அதிபர் நியமனம் பெரும் சான்றாகும்.
கடந்த 10 வருடங்களில் நடைபெற்ற பொதுச் சேவை பரீட்சைகளான SLAS, SLEAS, SLAcS, SLAuS, SLFS போன்ற பரீட்சைகளின் முடிவுகளையும் நியமனங்களையும் பார்க்கின்ற போது தமிழ் பேசும் மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் தெரிவு நிலை மிக மோசமாக திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
ஏப்ரல் 21 குண்டு வெடிப்பிற்கு பின்னரான முதல் பரீட்சை முடிவின் தாக்கம் இப்படி வந்திருக்கிறது என்றால் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் பொதுச் சேவை உயர் பதவிகளுக்குச் செல்வது என்பது முயல் கொம்பாகவே ஆகும் பேராபத்து தெரிகிறது.
இனவிகிதாசரம் கவனிக்கப்படாமல் ஏனைய பொதுச் சேவை நியமனங்கள் நடைபெற்றாலும் அதிபர் நியமனங்களுக்கு இனரீதியாகவும் மொழி ரீதியாவும் வகைப்படுத்தப்பட்டே ஆட்சேர்ப்புச் செய்யப்பட வேண்டும் என்ற யதார்த்தம் ஒன்று இருக்கிறது.
ஏனெனில் பாடசாலைகள் இனரீதியாகவும் மொழிரீதியாகவுமே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது இந்நிலையில் நியமனத்தையும் இனரீதியாகவும் மொழிரீதியாகவும்தானே பார்க்க வேண்டும்.
மாறாக சிங்களவர்களையும் சிங்கள மொழிப் பரீட்சை புள்ளியையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக அதிபர் நியமனங்கள் செய்யப்படுவது தமிழ் மொழி பாடசாலைகளுக்கான வெற்றிடங்கள் எப்படி நிறப்பப்படும்.
இன்றுள்ள நிலையில் ஒரு இன பாடசாலைக்கு மற்ற இன அதிபர் நியமிக்கப்படுவதில்லை தமிழ் மொழி பாடசாலைக்கு சிங்கள மொழி அதிபர் நியமிக்கப்படுவதில்லை.
யதார்த்தம் இவ்வாறு இருக்க பரீட்சை புள்ளி அடிப்படையில் அதிக சிங்களவர்களுக்கு திட்டமிட்டு நியமனத்தை வழங்கினால் எதிர்காலத்தில் தமிழ் மொழி பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு சிங்கள அதிபர் நியமனமா செய்யப்படுவது?
இலங்கை முழுவதும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு 1000 ற்கு மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் 600 மேற்பட்ட அதிபர் வெற்றிடங்கள் உள்ளது.
இந்த வெற்றிடங்கள் இருக்க தக்கதாகத்தான் தற்போது வழங்கப்படும் அதிபர் நியமனத்திற்கு முஸ்லிம்கள் 155 பேர் உள்ளடங்களாக 515 தமிழ் மொழி மூலமானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்றிருந்தார்கள்.
இருந்தும் தற்போது 34 முஸ்லிம்கள் உட்பட தமிழர்கள் அடங்கலாக 160 தமிழ் மொழி அதிபர்கள் நியமனம் பெற இருக்கிறார்கள். 1000 ற்கு மேற்பட்ட தமிழ் மொழிரீதியான வெற்றிடங்களில் மீதியுள்ள வெற்றிடங்களுக்கு இன்னும் மொரு போட்டிப்பரீட்சையா நடத்துவது?
பேரினவாத அடக்குமுறை நிர்வாகத் துறையிலும் உயர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதிலும் மிக மோசமாக செயற்படுவதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது எங்கு சென்று முறையிடுவது.