தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் எப்பொழுது வீடு திரும்புவார் என்பது அப்பல்லோ நிர்வாகத்துக்கே தெரியாத ஒன்று. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு பேட்டியளித்து வருகிறார் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி.
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார், அவர் எப்பொழுது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார் என கூறும் பிரதாப் ரெட்டி, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, முதல்வரின் உடலுறுப்புகள் சீராக ஏழு வாரங்கள் ஆகும் என மாறி மாறி பேசி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு ரோபோடிக் இயந்திரம் ஒன்று கொண்டு செல்லப்பட்டு அது முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தளத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரோபோடிக் தெரபி சிகிச்சை மிகவும் பிரசித்தி பெற்றது.
அந்த ரோபோடிக் தெரபி சிகிச்சை மூலம் முதல்வரின் உடல் அசைவை மேற்கொள்ளும் சிகிச்சையை செய்ய அப்பல்லோ திட்டமிட்டிருப்பதாகவும் வழக்கமான பிசியோதெரபியும் தொடரும் எனவும் மருத்துவமனை வட்டார தகவல் கூறுகின்றது.