நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட ஞானசார தேரர் உட்பட அனைவருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவுள்ளபோதும் சந்தேக நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இத்தகவலை சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை மற்றும் சட்டத்தரணிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிற்கு முன்பாக வடக்குமான சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று முன்னெடுத்திருந்தனர்.
இதை அடுத்து, தமது போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சட்டத்தரணி சுகாஷ் இதனை கூறியுள்ளார்.
மேலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் சட்டத்தரணி மீது தாக்குதல் நடத்திய பிக்கு மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு ஞானசார தேரர் மீது உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள கூறிய அவர், அதனை பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார் மீதும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் நீதிமன்றில் முன்னிறுத்தப்படும் வரை தொடர்ந்தும் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு, அண்மையில் ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.