செம்மலை நீராவியடி விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சட்டத்தரணி உட்பட்டோர் தாக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி சுதர்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டத் தரணிகள் சங்கம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன எவ்வாறான பதிலை வழங்கப் போகின்றன என்பதிலேயே தமது எதிர்கால நடவடிக்கைகளைகள் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துளார்.
முல்லைத்தீவு சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், அதில் கலந்துகொண்டு நேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 21ஆம் திகதி நீராவியடிப் பிள்ளையார் கோவிலருகே இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதன் பிற்பாடு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் முறையிட்டுள்ளோம்.
இது தொடர்பாக நீதிமன்றினுடைய தீர்ப்பினை புறந்தள்ளி அநாகரீகமான முறையில் நடந்து கொண்டவர்கள் மற்றும் சட்டத்தரணி ஒருவர் உட்பட பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாம் வலியுறுத்தியிருக்கின்றோம்.
அதற்கு ஒரு சாதகமான பதில் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம். அத்துடன் கிடைக்கும் பதிலைப் பொறுத்தே எங்களுடைய எதிர்கால நடவடிக்கைகள் காணப்படும்.
மேலும் சட்டத்தரணிகள் சில விடயங்களை பெரிதாக்குகின்றனர் என ஊடகங்களிலே பரவலாக பேசப்பட்டு வருகின்றது. நாம் இக்கருத்தினை மறுக்கின்றோம்.
நீராவியடிப் பிள்ளையார் கோயிலைச் சேர்ந்த நிர்வாகிகள், தங்களுடைய நீதியை நிலைநாட்டுவதற்காக சட்டத் தரணிகளை ஒழுங்கு செய்திருக்கின்றனர். இதில் சட்டத்தரணிகள் கோயில் நிர்வாகத்தினரை வலிந்து இழுத்து வழக்குப் பேசவேண்டிய தேவைப்பாடு கிடையாது.
இதேவேளை, நீதிமன்றிலே தீர்வு ஒன்று எட்டப்பட்டு, அதை நடைமுறைப் படுத்துவதற்காகவும், மரணித்த பௌத்த மதகுருவினுடைய இறுதிச் சடங்கிலே கலந்து கொண்டு அஞ்சலியைச் செலுத்தவும் சென்ற சட்டத்தரணிகளில் ஒருவரே தாக்கப்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில் எமது முறைப்பாட்டிற்கு சட்டத்தரணிகள் சங்கம், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.