தமிழகத்தில் ஆண் நண்பருடனான பழக்கத்தை கைவிடுமாறு கூறிய கணவனை, அவருடன் சேர்ந்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள முடிகனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். விவசாயியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சித்ராவுக்கு கல்லூரி மாணவரான சுதாகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் மனோகரனுக்கு தெரிய வரவே, இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார்.
அத்துடன் சித்ராவை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தங்கள் உறவுக்கு கணவரை தடையாக இருப்பதாக கருதிய சித்ரா, அவரை கொலை செய்ய சுதாகருடன் சேர்ந்து 6 மாத காலமாக திட்டம் போட்டுள்ளார். மனோகரனை கொல்ல இருவரும் சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தான் கடந்த 24ஆம் திகதி, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வருமாறு மனோகரனை சந்தைக்கு அனுப்பியுள்ளார் சித்ரா.
உடனே இந்த தகவலை சுதாகரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தனது வீட்டிற்கு டிராக்டர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சுதாகர், முடிகனம் கருப்புசாமி காடு அருகே மனோகரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததைக் கண்டுள்ளார். பின்னர் டிராக்டரை வேகமாக செலுத்திய சுதாகர், அதிவேகத்தில் மனோகரனின் மீது மோதியுள்ளார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மேல் டிராக்டரை ஏற்றிவிட்டு சுதாகர் நிற்காமல் சென்றுள்ளார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மனோகரனைப் பார்த்தவர்கள், உடனடியாக அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால், பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் சிலர் மனோகரனை டிராக்டர் ஏற்றிக் கொன்றது சுதாகர் தான் என பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் சுதாகர் மற்றும் சித்ராவை கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சித்ரா அளித்த வாக்குமூலத்தில், ‘என் கணவர் என்னை அன்பாக வைத்திருந்தார். வீட்டின் அருகில் வசித்த கல்லூரி மாணவனான சுதாகருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தை என் கணவர் கண்டுபிடித்துவிட்டார். இரண்டு பேரையும் கண்டித்தார். தினமும் இதையே கூறி என்னைத் திட்டினார்.
இதனால் கோபமான நான், சுதாகர் மூலமாக அவரைக் கொல்ல திட்டம்போட்டேன். இரண்டு பேரும் சேர்ந்து கடந்த 6 மாதங்களாகவே பல திட்டங்களைப் போட்டோம். ஆனால், எளிதில் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து, டிராக்டரை விட்டு ஏற்றிக்கொன்றுவிட்டு விபத்துபோல காட்டி தப்பித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் சுதாகர் என் கணவரை டிராக்டர் ஏற்றிக் கொல்வதை சிலர் பார்த்துவிட்டார்கள். அதனால் மாட்டிக்கொண்டோம்’ என தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தைக் கேட்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.