பிரேமதாச ஜனாதிபதியின் மகன் என்ற அடையாளத்தோடு கட்சியில் நுழைந்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளராக ஆகியிருக்கிறார்.
பிரேமதாச யுகம் என்றதுமே ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகளைக்கட்டிக்கொடுத்ததும், கம் உதாவ கிராம எழுச்சித்திட்டங்கள், ஆடைத்தொழிற்சாலைகள் என அகல விரியும் அந்தக்காலம்…
‘2000 ம் ஆண்டு அனைவருக்கும் புகலிடம்’ என்ற பிரேமதாச காலத்து பழைய பதாகைகள் இன்றும் சில கிராமங்களின் ஓரங்களில் சோபையிழந்து நிற்கின்றன.
அதே போல புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது , போர் நிறுத்த காலத்தில் கல்முனையில் 600 பொலிஸ்காரர்கள் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டபோது திருப்பிச்சுட உத்தரவுகேட்ட போதும் சரண்டைய சொன்ன பிரேமதாசவின் உத்தரவு, 60,000 சிங்கள இளைஞர்களை JVP கிளர்ச்சியில் போட்டுத்தள்ளியதோடு அதன் தலைவரை கனத்தை மயானத்தில் வைத்து சுட்டுக்கொன்று சுடலையில் பிணத்தின் சாம்பலை கூட காணாதபடி செய்தது என இன்னொரு நெடிய கொடிய பக்கமும் உண்டு.
சஜித்தின் மூலம் மீண்டும் பிரேமதாச யுகம் என்று கோசம் எழுப்புகிறவர்கள் எந்த யுகத்தை ஆசிக்கிறார்கள் என்பது புரியவில்லை.
சஜித் பிரேமதாச எல்லோரையும் போல அதே நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்கிற அதரப்பழசான வாக்குறுதிகளோடு களத்தில் குதித்திருக்கிறார்.
நான் சும்மா கேட்கிறேன் 1993 ம் ஆண்டு அப்பா செத்த பிறகு அரசியலில் இறங்கி 2000 ம் ஆண்டு எம்பியாகி இதுவரை 19 வருடங்கள் பாராளுமன்றத்தில் உரைகளை ஆற்றியிருக்கும் சஜித் பிரேமதாச தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆற்றிய காத்திரமான உரையொன்றை பற்றி யாராவது அறிந்திருக்கின்றீர்களா?
அல்லது இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, அதிகார பரவலாக்கல் பற்றியெல்லாம் பல முன்னணி அரசியல்வாதிகள் பல அரங்குகளில் பேசக்கேட்டிருக்கிறோம்.
சஜித் பேசி எப்போதாவது கேட்டதுண்டா?
சஜித் செய்துவந்ததெல்லாம் பெளத்த விகாரையொன்றிற்கு ரூபா 50,000/- திட்டம். இதன் மூலம் பெருந்தேசியத்தின் திருப்தியை, ஆதரவை சம்பாதிப்பதில் ஆரம்ப முதல் அப்பனை போல கவனமாக இருந்தார்.
போர்க்காலத்தில் அவர் நாட்டில் இருந்தது குறைவு. ஐரோப்பிய நாடுகளில் வெவ்வேறு டீல்களில் இருந்தார். ( டீடெய்லாக எழுதுவதில் சில சிக்கல்கள் உண்டு).
கடந்த நல்லாட்சி அரசாங்கம் (?) ஆட்சிக்கு வந்த போது இவருக்கு வீடமைப்பு அமைச்சும் ரவூப் ஹகீமிற்கு நகரத்திட்டமிடல், நீர்வளங்கள் அமைச்சும் வழங்கப்பட்டன.
இதன்போது கொம்பனித்தெருவில் (Slave Island) வீடுகள் உடைக்கப்பட்டு விரட்டப்பட்ட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் மிக்க ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் சஜித்தின் அமைச்சுக்கு சென்று தங்களது பிரச்சினையினை முறையிட முற்பட்ட போது அமைச்சின் விராந்தையில் வைத்தே ‘ஓகொல்லு றவூப் ஹகீம்ட யன்ட’ என்று விரட்டப்பட்ட வரலாறுகளும் உண்டு.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உட்பட்ட போது பல அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் மீதான வீண்பழிகளை ஆற்றுப்படுத்தும் பல நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார்கள்.
குறிப்பாக அமைச்சர் மங்கள சிங்கள பெளத்த கோட்டையான மாத்தறையில் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆர்ப்பாட்டமொன்றையே செய்தார்.
சஜித் என்ன செய்து கொண்டிருந்தார்?
2010 ம் ஆண்டு போருக்கு உத்தரவிட்ட தலைவர் மஹிந்தவா? போரை வழிநடாத்தி வென்ற தளபதி பொன்சேக்காவா ? என்ற நிலை உருவான போது தமிழ் மக்கள் பொன்சேக்காவை கொண்டாடியது போல….(?)
இம்முறை இரண்டு பெருத்தேசியவாத முகங்களில் இரண்டாவதின் பாரதூரம் சரியாகத்தெரியாமல் இலங்கை சிறுபான்மையினர் சஜித்தின் பக்கம் சாய்வது தெரிகிறது.
கடந்த தேர்தலிலும் வேறு வழியின்றி ராஜபக்சக்களில் அச்சங்கொண்டு பேயில் பயந்து பிசாசில் விழுந்த சீலம் நிகழ்ந்தது.
ஆகையினால் வரண்ட தொண்டைக்கு தண்ணீர் வார்த்த ஆபத்பாந்தவனாய் கொண்டாடுவதற்கும் குதூகலிப்பதற்கும் சஜித்தின் வேட்பாளர் பிரவேசம் அவ்வளவு ‘வேர்த்’ இல்லை என்பதை காலம் புரிய வைக்கும்.
சுருங்கச்சொன்னல் சஜித் ஆங்கிலம் பேசும் இன்னொரு சிரிசேன என்பதை தவிர வேறு விசேஷங்கள் ஏதுமில்லை.