கடந்த வாரத்தில் குறைந்திருந்த தங்கத்தின் விலை, நடப்பு வாரத்தில் மீண்டும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதிலும் செப்டம்பர் 20 முதல் தொடர்ந்து தங்கத்தின் ஏறுமுகமாகவே உள்ளது.
தங்கம் ஏறினால் என்ன? இறங்கினால் என்ன? நாங்கள் வாங்குவதை வாங்கித் தான் தீருவோம் என்பது போல, இன்றளவிலும் தங்க நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் இருக்கிறது.
விலை அதிகரிப்பிற்கான காரணம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, அந்த நாட்டு அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாட்டில் நீண்ட கால அரசியல் நிச்சயமற்ற தன்மைக்காக வாய்ப்புகளை இது அதிகரித்ததுள்ளது.
இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நிச்சயமற்ற போக்கை உருவாக்கியதோடு, முதலீடு குறித்தான பயத்தையும் உருவாக்கியுள்ளது. ஆக முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போதைய பாதுகாப்பான முதலீடாக, தங்கத்தின் மீதே அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.
இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலையானது மிக வலுவான நிலையிலேயே வர்த்தகமாகி வருகிறது. அதிலும் சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1515 – 1530 டாலர் என்ற நிலையிலேயே இருந்து வருகிறது.
இந்தியாவை பொறுத்த மட்டில் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. இந்திய அரசாங்கம் தங்கத்தின் இறக்குமதியை குறைந்துள்ள நிலையில் விலை அதிகரிப்புக்கு, ஒரு இதுவும் காரணமாக அமைந்துள்ளது.
அதிலும் வரவிருக்கும் நவராத்திரி, தீபாவளி பண்டிகை கால சீசன் ஆரம்பிப்பதால் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களும் சரி, தங்க நகையாக வாங்குபவர்களும் சரி தங்கத்திலேயே முதலீடு செய்யவிரும்புகின்றனர்.
குறிப்பாக தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், நடுத்தர மக்களின் பார்வையில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. ஆக மக்கள் மாத மாதம் குறைந்த அளவு முதலீடு செய்யும் திட்டத்தினை மிகச் சிறந்த திட்டமாக நினைக்கின்றனர்.
இந்நிலையில் பெரிய நிறுவனங்கள் கூட இவ்வாறு மாத மாதம் முதலீடு செய்பவர்களுக்கு செய்கூலி கிடையாது, சேதாரத்தில் சலுகை, மேலும் இது தவிர பல சிறப்பு சலுகைகளை வழங்கி அசத்தி வருகின்றன.
இதுபோன்ற திட்டங்கள் தீபாவளியை குறி வைத்தே நடத்தப்படுகின்றன. இதனால் இது தீபாவளி விற்பனையை இன்னும் ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து வரும் காலாண்டிலும் தொடர்ந்து முகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால் தங்கத்திற்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் வரவிருக்கும் பண்டிகைகால சீசன், திருமண முகூர்த்தம் ஆரம்பிக்க விருப்பதால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும்.
இதன் காரணமாகவும் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும், மேலும் சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலையானது தொடர்ந்து வலுவாக இருந்து வரும் நிலையிலும், நீண்ட காலபோக்கில் தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.