பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் நடைபயணம் மேற்கொண்ட போது 300 அடி பள்ளத்தில் கிழே விழுந்து உடல் சிதறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவருடன் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள Madeira பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர்கள் குறுகிய மலைப்பகுதிகள் மற்றும் காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் Levada do Norte என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் 300 அடி உயரம் உள்ள Ribeira Brava என்ற பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது Eira do Mourao என்ற பள்ளத்தாக்கில் இருக்கும் பாலத்தின் மீது ஏறி அப்பெண் நடந்துள்ளார். அப்போது ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக அவர் நிலைதடுமாறி கிழே விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அப்பெண்ணின் கணவர் உடனடியாக அப்பகுதியில் உள்ள மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் சுமார் 4 மணி நேர தேடலுக்கு பின்னரே அவருடைய உடலை தேடி கண்டு பிடித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் அவ்வப்போது மழை பொழியும் என்றும் இதனால் பாலத்தின் மீது இருந்த ஈரத்தால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவருடன் வந்த கணவர் ஆஸ்திரியாவில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைபார்த்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் ஆஸ்திரியா நாட்டில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இப்பகுதிக்கு இதுவரை மூன்றுமுறை வந்துள்ளதாகவும், இது ஒரு மோசமான இடம் என்று எச்சரிக்கை பலகை வைத்துள்ளதை கண்டும், அஜாக்கிரதை காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று ஜெர்மனைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த மார்ச் மாதம் Funchal பகுதியில் இறந்ததாக கூறப்படுகிறது. இது போன்று பல சம்பவங்கள் இப்பகுதியில் நடந்துள்ளதால், இப்பகுதிகள் இந்த ஆண்டு முதல் கவனிப்பு வளையத்துக்குள் கொண்டுவருவதாக கூறப்படுகிறது.