தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மிரட்டல்கள் வந்ததால் இடம் மாற்றப்பட்டது.
விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர். பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலின் அலுவலகம் விருகம்பாக்கம், குமரன் காலனி, 1-வது தெருவில் உள்ளது. அந்த அலுவலகத்தின் வெளியே காவலுக்கு நின்றுகொண்டு இருந்த காவலாளி நேற்று மாலை திடீரென அய்யோ என்று அலறினார். சத்தம் கேட்டு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்த ஊழியர்கள் வெளியே வந்து பார்த்தபோது காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 5 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தின் மீது கற்களை வீசிவிட்டு அந்த காரிலேயே தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த அலுவலகத்தில் வீசப்பட்ட கல்லையும் போலீசார் கைப்பற்றினர்.
நடிகர் சங்க பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட விரோதம் காரணமாக விஷால் அலுவலகத்தில் கல்வீச்சு நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.