எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்க போவதாக தெரிவித்து மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் நேற்றைய தினம் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் உட்பட நூற்றுக்கணக்காண வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது அரச நியமனம் கோரி கடந்த 2015 தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்ணாவிரதம் மற்றும் வீதியோரப் போராட்டங்களை தாம் மேற்கொண்டு வந்தபோதும் இதுவரை தமக்கு நியமனங்கள் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
2019 ஆம் ஆண்டு வரைக்கும் பட்டதாரிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்ற நிலையில் அந்தந்த ஆண்டு நியமனங்களை வழங்கியிருந்தால் இவ்வாறு வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்திருக்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எங்களுக்கான அரச நியமனங்களை தரவேண்டும் அல்லது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கட்சிகள் தமது கோரிக்கைக்கு எழுத்து மூலமான உத்தரவாதத்தை வழங்கினால் மட்டுமே எமது வாக்குகளை வழங்குவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர் .
இந்த கோரிக்கையை எந்த கட்சியும் ஏற்காவிடில் நாங்கள் ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்ல எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் உட்பட அனைத்து தேர்தலையும் புறக்கணிப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் , நாடளாவிய ரீதியில் 25 ஆயிரம் பட்டதாரிகள் உள்ள நிலையில், அரசாங்கம் சுமார் ஒரு இலச்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை இழக்க நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.