நபித்துவத்தின் பத்தாவது வருடம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் மரணமடைந்தபோது நபிகளார் வேதனையால் சூழப்பட்டிருந்ததோடு கதீஜா (ரலி) அவர்களின் உடல்நிலை குறித்த கவலையிலும் இருந்தார்கள் நபி முஹம்மது (ஸல்).
இஸ்லாமை முதன்முதலில் ஏற்றவர்கள் கதீஜா (ரலி). நபி முஹம்மது (ஸல்) அவர்களை எல்லாத் தருணங்களிலும் முழுமையாக நம்பியவர்கள். நபித்துவம் கிடைத்தது பற்றி நபிகளார் முதலில் சொன்னது கதீஜா (ரலி) அவர்களுக்குத்தான்.
நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தைப் பலருக்கு எடுத்துச் சொன்னவர்கள் கதீஜா (ரலி). நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரும் பலமாக நின்றவர்கள். தன்னுடைய செல்வத்தை இறைவழியில் செலவு செய்தவர்கள். நபிகளாருக்கு உறுதுணையாக, சகிப்புத் தன்மையுடையவராக, ஆதரவாக, ஆறுதலாக இருந்து வந்தவர்கள். நபிகளாரைப் பலரும் பலவிதமாகப் பேசியபோதும், நிராகரித்தபோதும், பொய்யர், மூடர், ஜோசியக்காரர், சூனியக்காரர் என்றெல்லாம் ஒதுக்கியபோதும் கதீஜா (ரலி) அவர்கள் துணையாக, இறைவனின் அருளாக, கருணையின் கடலாக, அன்பின் உருவாக நபிகளாருக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தவர்கள்.
ஒருமுறை நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்காக, கதீஜா (ரலி) ஒரு பாத்திரத்தில் உணவு கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை), “உங்களுக்கு உணவு கொண்டு வரும் உங்கள் மனைவிக்கு இறைவனின் தரப்பிலிருந்தும், என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி, அவருக்கு சொர்க்கத்தில் கூச்சலோ குழப்பமோ களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று நபிகளாரிடம் கூறினார்கள்.
கதீஜா (ரலி) அவர்களின் மூலமாகத்தான் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, குழந்தைகளை அல்லாஹ் அருளியிருந்தான். கதீஜா (ரலி) அவர்களுடன் மட்டும்தான் நபிகளார் கால் நூற்றாண்டுக் காலம் வாழ்ந்தார்கள்.
கதீஜா (ரலி) அவர்கள் தனது 65-வது வயதில் மரணமடைந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வயது ஐம்பது. கதீஜா (ரலி) அவர்கள் இறக்கும் வரை, நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வேறு எந்த மனைவியுமில்லை, கஜீதா (ரலி) மட்டுமே நபிகளாருக்கு மனைவியாகத் திகழ்ந்தார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஆதரவாக இருந்த இருவரும் மரணமடைந்த நிலையில் நபிகளார் நிலைகுலைந்துப் போனார்கள்.
ஸஹீஹ் புகாரி 2:26:1791-1792, 4:63:3816-3817, 4:63:3820
– ஜெஸிலா பானு.