ஆடுகளம், வடசென்னை வரிசையில் தற்போது தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வந்துள்ள அடுத்த படம் ‘அசுரன்’. தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் எப்படி இருக்கு? வாருங்கள் பார்ப்போம்..
எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’. இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ’அசுரன்’.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வடக்கூரானுக்கும் சிவசாமியான தனுசுக்கும் இடையிலான நிலத் தகராரில் தனுஷின் மூத்த மகன் முருகன் கொடூரமாக கொல்லப்படுகிறார். அண்ணுக்காக பழித்தீர்க்கும் தனுசின் இளையமகன் சிதம்பரம், வடக்கூரானை வெட்டிக் கொலை செய்கிறார். இதற்காக பழிவாங்கத் துடிக்கும் வடக்கூரா னின் ஆட்கள் சிவசாமி குடும்பத்தை வேரறுக்க கிளம்ப திரைக்கதை டாப் கியரில் விறுவிறுப்பாகிறது.
வெக்கை நாவலை படத்தின் முதல் பகுதியில் கதையின் டேக் ஆஃப்-க்காக பயன்படுத்தி இருக்கும் வெற்றிமாறன் உள்ளபடியே அந்த நாவலை அடைப்படையாக மட்டுமே எடுத்துக் கொண்டு இரண்டாம் பகுதிக்கு தனது பாணியில் திரைக்கதை எழுதி அசத்தி இருக்கிறார். பீரியட் ஃபிலிமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தபடத்தில் அக்காலத்தில் இருந்த சாதியக் கொடுமைகள்., உயர்ச் சாதியினரின் அராஜகப் போக்கு என எல்லாவற்றையும் துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார், வெற்றிமாறன்.
ஊருக்குள் செருப்பு அணிந்து சென்ற தனுசின் அக்கா மகள் அவமானப்பட அங்கிருந்து கிளம்பிய பகையொன்றின் கிளைக்கதையை இரண்டாம் பாதியில் உருவாக்கி அதனை வெக்கையின் மூலக்கதையுடன் மிகச்சரியாக பொருத்தி இருக்கிறார் வெற்றிமாறன். வயதான அப்பா கதாபாத்திரத்தில் வரும் தனுஷின் உடல் மொழி அவ்வளவு திருப்தியாக இல்லை. ஆனால் ப்ளாஷ் பேக் காட்சியில் வரும் சிறுவயது தனுஷ் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறார்.
வெக்கை நாவலில் வடக்கூரானை சிதம்பரம் வெட்டும் காட்சி கடத்திய பதை பதைப்பை வேல்ராஜும் வெற்றிமாறனும் திரையில் கடத்த தவறிவிட்டனர். வெக்கை நாவலில் இருக்கும் விறுவிறுப்பு படத்தில் சற்று குறைவாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வக்கீலாக வரும் பிரகாஷ்ராஜ், பட்டியலின மக்களுக்கான பிரச்னைகளுக்கு ஆதரவாக இருக்கிறார். கோவில்பட்டி நிலத்தின் வெக்கையை மனதிற்குள் அருமையாக பரவச் செய்திருக்கிறார் வேல்ராஜ்.
சண்டைக் காட்சியில் பீட்டர் ஹெயினும் ஜி.வி.பிரகாசும் இணைந்து உருட்டி எறியும் வெடிகுண்டு அரங்கில் 4டி ஒலியில் தெறிக்கிறது. பின்னணி இசை படத்தின் பலம்.’ஒத்த நிலவப் போல குத்தவச்ச அழகுதாம்ல..’ என்ற பாடலின் ஒவ்வொரு வார்த்தையிலும் சீனிச்சேவின் இனிப்பு.. பாடல் ஆசிரியர் ஏக்நாத்திற்கு பாராட்டுகள். மோசமான போலீஸ் அதிகாரியாக வலம் வரும் பாலாஜி சக்திவேல் சரியான தேர்வு. தனுசின் இளையமகனாக வரும் கென் கோவில்பட்டியின் அசல் முகம்..
படம் துவங்கிய முதல் ஒரு மணிநேரம் மெதுவாக நொண்டியடிக்கும் திரைக்கதை வடக்கூரானை வெட்டியதும் வேகமெடுக்கிறது. கலைப்புலி தாணு மிகச்சரியான கதையை தேர்வு செய்து தயாரித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ’ஆடுகளம்’ படத்தில் மதுரையின் மொழி தனுஷிற்கு வசப்பட்ட அளவிற்கு, இப்படத்தில் கோவில்பட்டியின் வட்டார வழக்கு கைகூடவில்லை. டப்பிங்கில் பல இடங்களில் லிப் சிங் மோசம்.
இறுதிக்காட்சியில் “நம்மகிட்ட இருந்து நிலத்தை பறிக்கலாம், காச திருடலாம், ஆனா படிப்ப யாரும் திருட முடியாது நல்லா படிக்கனும்” என தனுஷ் பேசும் வசனம் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. சமீபகாலமாக நமத்துப் போய் கிடக்கும் தமிழ் சினிமாவில் அசுரன் நிகழ்த்தியிருக்கும் மாயம் சரவெடி.