ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அண்மையில் வெளியிட்டார்.
அதன்படி ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம், மற்றும் கே.கே நகர் பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.
அந்த வகையில் நேற்று மட்டும் கூடுதலாக 930 பேருந்துகளோடு மொத்தம் மூவாயிரத்து 155 பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று கூடுதலாக 765 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, விழுப்புரம், மதுரை, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு தங்கு தடையின்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.