லண்டனில் உள்ள சர்வதேச ஊடகம் ஒன்றின் தமிழ்ஓசையின் மூத்த செய்தியாளர் ஆனந்தி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முதன் முதலாகச் சந்தித்து பேட்டி கண்ட பத்திரிகையாளர் நீங்கள்தான்.
அந்தச் சந்திப்பு பற்றிச் சொல்லுங்கள்!
ஆனந்தி
லண்டனில் இருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்துவிட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரித்தார்கள். தொடர்ந்து கண்காணித்தார்கள்.
அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் பிரபாகரன் இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன். குளித்து முடித்து, புலிகளுக்குத் தகவல் சொல்லலாம் என்பது திட்டம்.
நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது. திறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கின்றார்கள்.
என்னைக்குறித்து விசாரிக்கின்றார்கள். நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்குச் சென்றுவிட்டது.
இதிலிருந்து ஒரு விசயத்தை என்னால் தெளிவாகப்புரிந்துகொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டு இருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள்.
கேள்வி
ஓ.. அதன் பிறகு பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது?
ஆனந்தி
பிரபாகரனை அவரது வீட்டில் சந்திக்கச் சென்றேன். வாசலில் நின்று அன்போடு வரவேற்றார்.
பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாகப் பழகுவார்.
எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனிதர்..
கேள்வி
தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்?
ஆனந்தி
விமர்சனங்களை அவர் வரவேற்றார்.
சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணும் என்றுதான் போனேன்.
ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த செஞ்சோலை குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளே ஒரு மாற்றம் ஏற்பட்டது.
தாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக அக்கறையுடன் அந்த இல்லத்தை பிரபாகரன் அமைத்து இருந்தார். நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனிதனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்.
அந்த செஞ்சோலை இல்லத்தைக் கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு விட்டன.
வன்னியில் இருந்து திரும்பியதும், சர்வதேச தனியார் ஊடகத்தில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து
“என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பு இட்டேன்.
பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரம் என்றே எனக்கு விளங்கவில்லை.
அவரைச் சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூடக் கேட்க நினைத்தேன்.
ஆனால் அவரை பார்க்கும்போது அந்தக் கேள்வியே எழவில்லை.
புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு! உண்மை அது அல்ல.
போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது.
எப்போதாவது உணர்ச்சிவசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால்கூட தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ? என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்குத் தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.
அது மட்டும் அல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால், உடனடியாக அமைப்பில் இருந்து நீக்கப்படுவார்.
அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.
சிவில் சட்டங்களின்படி அவருக்குத் தண்டனை வழங்கப்படும்.
கேள்வி
பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு!
ஆனந்தி
ஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன்.
ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.
அதே போல இந்திராகாந்தி மறைந்தபோதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள்.
கேள்வி
உங்களது ஈழப்பயணங்களின்போது வியக்க வைத்தது எது?
ஆனந்தி
பல விசயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டுக் காலத் தொடர் யுத்தம் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான்.
அதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார்.
தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான்.
அதன்படி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களை எல்லாம் கவனத்துடன் கணக்கு எடுத்தோம்.
பணப்பயிர்களைத் தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்குப் பழகினோம்.
மேலும்,
எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கு ஏற்றபடி பிற காய்கறி வகைகளையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்படித்தான் சந்திரிகாவின் கொடுமையான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர்.
புலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது.
புலிகள்,
விவசாயம், அமைப்பு நிர்வாகம்,
கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர்.