தென்னிந்திய நடிகர் சங் கத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையடுத்து, நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையில் முறைகேடு நடந்ததாக கூறி, முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரை சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சரத்குமார், ராதாரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘சரத்குமார், ராதாரவி ஆகியோர் தற்காலிகமாக சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது நேற்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், இவர்கள் இருவரையும் நிரந்தரமாக சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
எனவே, இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு காலாவதியாகி விடுகிறது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு நீதிபதி, ‘பத்திரிகைகளில் செய்தியை இன்று காலையில் படித்தேன். அதில் சரத்குமார், ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிப்பதாக கூறப்பட்டிருந்தது. நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர், இடை நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியாது.
எனவே, அந்த வழக்கை முடித்து வைக்கிறேன். அதே நேரம், நிரந்தரமாக தங்களை நீக்கி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் புதிதாக வழக்கு தொடரலாம்’ என்று கூறினார்.