தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க பிறகு முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இது தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 63-வது பொதுக்குழு கூட்டம் ஆகும். இந்த கூட்டம் அடிதடி கலாட்டாக்களுடன் தொடங்கினாலும், உறுப்பினர்களின் ஆதரவுடன் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன் முழு விவரம் கீழே வருமாறு,
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் அதுபற்றி பலமுறை கேட்டும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருக்கும் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் செயற்குழுவால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள்.
சங்க உறுப்பினர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது. மேலும் வயது வரம்பும் தளர்த்தப்படுகிறது.
சங்கத்தோடு எந்த தொடர்பும் இல்லாத 67 உறுப்பினர்களும் அவர்கள் தங்களுடைய உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பாக பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கவேண்டும். அதன்பிறகும் அவர்கள் புதுப்பிக்க வில்லை என்றால் சங்கத்தை விட்டு நீக்கப்படுவர்.
சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சிஎம்டிஏ அனுமதி கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு கட்டிட பணி தொடங்கப்படும். 3 வருட காலத்திற்குள் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
சங்க அறக்கட்டளை விதிமுறைகளில் திருத்தம் செய்து தங்களை நிரந்தர அறங்காவலர்களாக நியமித்துக் கொண்ட முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் அறக்கட்டளையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
சங்கத்தின் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், சங்க விதிகளுக்கு முரணாகவும், எதிராகவும் நடப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது சங்கத்தில் 8.5 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது. மேலும், கட்டடம் கட்ட நிதி திரட்ட திரைப்படம் தயாரிப்பாது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முயற்சிக்கப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.