யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடா்படையவரும், ஆவா குழுவின் முக்கிய நபா்களில் ஒருவருமான தனுரொக் என்ற இளைஞன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்ய்யப்பட்டுள்ளார்.
இன்று பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் மானிப்பாய்- லோட்டன் வீதியில் உள்ள தனுரொக்கின் வீட்டை முற்றுகை யிட்டபோதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் குறித்த வீட்டில் தாயாரும் மகளும் மகனும் மட்டுமே இருந்த நிலையில் குடும்பத்தலைவர் கொழும்புக்கு சென்றிருந்ததாகவும் தெரிய வருகின்றது.
வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடத்திய அதிரடிப்படையினரால் வீட்டு வளவிலிருந்து
03 துருப்பிடித்த வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டிலிருந்த இளைஞன் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞர் மீது வன்மமான முறையில் பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே இவ்வாறு 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பல வழக்குகளில் இளைஞர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தால் பொலிஸார் எச்சரிக்கை செய்யப்ட்டிருந்த நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.