விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியின் போட்டியாளராக முகென் ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். டிவி, செல்போன், பத்திரிகை என எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும்.
வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கடந்த இரண்டு வருடங்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 2017-ம் ஆண்டு ஆரவ்வும், 2018-ம் ஆண்டு ரித்விகாவும் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன் 3-வது சீசன் ஜூன் 23-ம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மூன்றாவது முறையாக கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதில் போட்டியாளர்களாக பாத்திமா பாபு, லாஸ்லியா, சாக்சி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் பங்கேற்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் பல போட்டிகள் நடத்தப்பட்டு இடையே ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வந்தனர். இறுதிப் போட்டியில் முகென் ராவ், சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகியோர் இருந்தனர். இதன் வெற்றியாளர் யார் என்பது குறித்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பானது.
இதில் 3-வது இடத்தை லாஸ்லியாவும், 2-வது இடத்தை சாண்டியும் பிடித்தனர். வெற்றியாளராக முகென் ராவ் அறிவிக்கப்பட்டார். அவருக்குப் பரிசாக 50 லட்ச ரூபாய் பரிசுப் பணமும், பரிசுக் கோப்பையும் வழங்கப்பட்டது. முகென் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவரது நண்பர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
முன்பு நடந்த இரண்டு பிக் பாஸ் சீசன்களை விட, இந்த சீசனில் பல்வேறு சர்ச்சைகளும் இடம்பெற்றது.
காவல்துறை அதிகாரிகள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தியது, மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்தது உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.