உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் இறைமகன் இயேசுவுக்கு அடுத்தபடியாக அவரை ஈன்று, வளர்த்து உலகுக்குத் தந்த அன்னை மரியாளை வழிபட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் ஆரோக்கிய அன்னை வேளாங்கன்னியாக அருள்பாலித்துவரும் மரியாளின், விண்ணேற்றப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல அன்னை மரியாளின் பிறந்தநாளான செப்டம்பர் 8 ஆம் தேதியை ‘ ஆரோக்கிய அன்னை திருவிழாவாக’ கொண்டாடுகிறார்கள்.
கத்தோலிக்க மதத்தின் தாய்தெய்வ வழிபாட்டில் முக்கிய அங்கமாக இருக்கும் அன்னை மரியாளின் வாழ்வு மலர்பாதையில் நடந்து வந்தது அல்ல. ஒரு தன்னலமற்ற தாயாக அவர் இருந்தார். அவர் வாழ்ந்து காட்டிய முன்மாதிரி அபூர்வமானது.
கண் முன்னால் ரத்தம் சொட்டச் சொட்ட சிலுவையைச் சுமந்தபடி கல்வாரி மலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட மகனைச் சந்தித்த தாயின் பார்வை மொழியை எண்ணிப்பாருங்கள்.
பிறகு குற்றுயிரோடு கள்வர்கள் நடுவே மகன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டபோது எப்படித் துடித்திருப்பார். பிறகு அவர் உயிர் விட்டதும், சிலுவையிலிருந்து இறக்கிய மகனின் உடலை மடியில் கிடத்திக்கொண்டபோது அந்தத் தாயின் இதயத்தை சீமோன் குறிப்பிட்ட கொடுந்துயர் எனும் வாள் எத்தனையாவது முறையாக ஊடுருவிச் சென்றிருக்கும்? இறைமகனை கர்ப்பத்தில் சுமந்து, பெற்று, வளர்த்து பிறகு மரணத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பெண் அறிந்திருந்து வாழ்நாள் முழுவதும் துயர் கொள்வது எத்தனை பாரமானது? இத்தனை பாரங்களை மரியாள் சுமந்த காரணத்தால்தால் இன்று உலகம் அவரைக் கொண்டாடுகிறது.
மீட்பராகிய தன் மகன் மீது மரியாளுக்கு பலமான விசுவாசம் இருந்தது. அவருடைய மரணத்திற்குப் பிறகும் அந்த விசுவாசம் தணிந்துவிடவில்லை. அவருடைய உயிர்த் தெழுதலுக்குப் பின், ஜெபம் செய்வதற்காக ஒன்றுகூடி வந்த உண்மையுள்ள சீடர்களுடன் அவரும் இருந்தாள். அவர் ஏற்றுக்கொண்ட வலிகள், அவரை வழிபாட்டுக்குரிய அன்னையாக மாற்றியிருக்கின்றன. இவர் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.