ஜனாதிபதி தேர்தலுக்காக இன்று (7) வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகன போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய காலை 6 மணி முதல் குறித்த வாகன போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கலுக்காக வருகை தரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தமது வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக பிரத்தியேக இடம்மொன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வருகைதரும் சகல ஆதரவாளர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் அவர் கூறினார்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் சந்தர்பங்களில் வாகன பேரணி, மக்கள் பேரணி ஆகியவற்றை நடத்துவதற்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டவூட், பெனர் மற்றும் பதாகளை காட்சிப்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து ஒழுங்குகள் காலை 6 மணிக்கு ஆரம்பமாவதாகவும் அவர் கூறினார்
அதற்கமைய ஸ்ரீ ஜயவர்தன கோட்டை வீதியின் ஆயூர்வேத சுற்றுவட்டத்தில் இருந்து வெலிக்கடை சந்திவரையிலும் கொழும்பில் இருந்து வாகனங்கள் வெளியில் செல்ல முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஸ்ரீ ஜயவர்தன கோட்டை வீதி ஊடாக கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பழைய கொட்டாவ வீதி, வெலிக்கடை சந்தியில் இருந்து ஆயூர்வேத சுற்றுவட்டம் வரையான வீதியின் ஒரு மருங்கில் மாத்திரம் கொழும்புக்குள் வாகனங்கள் உட்பிரவேசிக்க காலை 6 மணி வரை மாத்திரம் அனுமதியளிக்கப்படவுள்ளது.
அதேபோல் கொழும்பில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் பழைய கொட்டாவ வீதியின் இடது புறத்தில் உள்ள இரண்டு மருங்குகளிலும் பயணித்து கொழும்புக்கு வெளியில் செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாகன போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 500 மேற்பட்ட பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1200 க்கும் அதிகமான பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.