ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண் அம்பியூலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட போது, நடுவழியில் பெட்ரோல் இல்லாததால் இறந்து போன சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துயரமான சம்பவம் ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான துளசி முண்டா வெள்ளிக்கிழமை இரவு பிரசவ வலியால் துடித்துள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் துளசி முண்டாவை அருகில் பங்கீர்பூசி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உடனடியாக உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி பர்பிடாவில் உள்ள பண்டிட் ரகுநாத் முர்மா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
ஆனால் அந்த நேரத்தில் மனைவியை அழைத்து செல்ல அம்பியூலன்ஸ் வசதி இல்லாமல் அவசர அழைப்பு தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் எந்தவித உதவியும் அவருக்கு கிடைக்காமல் போனது.
இதனால் தனியார் அம்பியூலன்ஸை வரவழைத்த கணவர் சித்தரஞ்சன் , கர்ப்பிணி மனைவி துளசியை அழைத்து கொண்டு பர்பிடா நகரை நோக்கி சென்றார்.
ஆனால் கர்ப்பிணியை ஏற்றிச்சென்ற அம்பியூலன்ஸ், எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்று கொண்டது. இதனால் அடுத்த அம்பியூலன்ஸ் வருவதற்கு 45 நிமிடம் தாமதம் ஆகியது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணான துளசி முண்டா பரிதாபமாக இறந்து போனார்.
இது தொடர்ளபாக துளசி முண்டாவின் கணவர் சித்தரஞ்சன் முண்டா. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“ஆம்புலன்ஸ் எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்று கொண்டது. இதனால் செவிலியர்கள் மற்றொரு அம்பியூலன்ஸ்க்கு அழைத்தனர். அந்த ஆம்புலன்ஸ் வருவதற்கு 45 நிமிடம் தாமதனம் ஆனது. சுமார் ஒரு மணி நேரம் கடந்து என் மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் என் மனைவி இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டனர்” என வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில் மயூர்பஞ்சின் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரி பிரதீப் குமார் மொஹாபத்ரா இது பற்றி கூறுகையில்,
“துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து இன்று (நேற்று) எனக்குத் தெரிய வந்தது. அம்பியூலன்ஸ் ஓட்டுநர் கூறுகையில், வாகனத்தின் எண்ணெய் குழாய் மருத்துவமனைக்கு நடுப்பகுதியில் கசிந்தது என்றார்.. இருப்பினும், இது குறித்து நான் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.