விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் யாரேனும் நாட்டிற்குள் இருந்தால் அவர்களுக்கு அரசியல் செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதென குறிப்பிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க, ஆனால் பிரிவனைவாதம், தனி ஈழ கோரிக்கை என்பவற்றை அவர்கள் கைவிட்டே அரசியலுக்குள் வரவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய தமிழ் அரசியல் தலைவர்கள் மீண்டும் பிரபாகரன் ஒருவரை உருவாக்கவே திட்டம் தீட்டுகின்றனர் எனக் குறிப்பிட்ட நிஷாந்த வர்ணசிங்க, அவர்கள் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒற்றையாட்சிக்கு இணங்காததோடு, தனி ஈழம் வேண்டாம் என யாருமே இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு என்பவற்றிற்கு அதிருப்தியும் தெரிவித்துள்ளார்.