கடந்த 1987 ஆம் ஆண்டு அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கை வந்திறங்கிய இந்திய படையினர் பல்வேறு படுகொலைகளை அரங்கேற்றியிருந்தனர்.
அவர்களால் அரங்கேற்றப்பட்ட இப்படுகொலைகளில் முதலாவதாக 1987 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 11, 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படியில் 50 மேற்பட்ட பொதுமக்கள் துப்பாக்கியால் சுட்டும், டாங்கிகளை கொண்டு வீதியில் போட்டு நசித்தும் துடிதுடிக்க கொல்லப்பட்டனர்.
அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழ் இனப் படுகொலை சம்பவமாக பிரம்படி படுகொலை பதிவாகியிருந்தது.
அத்துடன் பிரம்படி சந்தியில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவு தூபியும் அமைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று நினைவேந்தப்பட்டது.
இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்காக உளமார்ந்த அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தலைவர், யாழ்.மாநகர உப தவிசாளர், சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.