சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த சில நாட்களில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.
கடந்த சில தினங்களாக நடந்த தீவிர பேச்சுவார்த்தையையடுத்து, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் பெரமுனவை ஆதரிக்க எடுத்த முடிவு கட்சிக்குள் ஒரு தரப்பை கடுமையாக அதிருப்தியடைய வைத்துள்ளது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவரது ஆதரவு அணியினர் கடுமையான அதிருப்தியுடன் உள்ளனர்.
சந்திரிகா ஆதரவு எம்.பிக்கள் ஐவரே சஜித்தை ஆதரிக்கவுள்ளனர். கடந்த சில தினங்களாக மங்கள சமரவீர, மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருடன் அவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சந்திப்பின் பின்னணியில் சந்திரிகாவே செயற்பட்டிருந்தார்.
இரு தரப்பிற்குமிடையிலான இணக்கப்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, அடுத்த சில தினங்களில் ஐந்து எம்.பிக்களும் சஜித்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.
இதேவேளை, கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்களான- தொகுதி அமைப்பாளர்களில் கணிசமானவர்களும், பெரமுனவிற்கான ஆதரவை விரும்பவில்லை. பெரமுனவை ஆதரிக்கும் முடிவை எடுப்பதற்கு முன்னர் தொகுதி அமைப்பாளர்களை அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரகசிய கருத்துக்கணிப்பொன்றை நடத்தியிருந்தார். அனைத்து தொகுதி அமைப்பாளர்களிடமும் படிவமொன்றை வழங்கி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அவர்களின் நிலைப்பாட்டை குறிப்பிடும்படி கேட்கப்பட்டிருந்தது.
அனேகமாக தொகுதி அமைப்பாளர்கள், சு.க தனித்து செயற்பட வேண்டுமென்றே குறிப்பிட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் அதிருப்தியடைந்துள்ள தொகுதி அமைப்பாளர்கள் இரண்டு அணியாக செயற்பட்டு வருகிறார்கள். அதிருப்தியாளர்களை வளைத்துப் போட ஐ.தே.க முயன்று வரும் நிலையில், எஞசியவர்கள் தனித்து செயற்பட்டு சு.கவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மைத்திரி பலமிழந்த பின்னர், அவருடன் கட்சியினர் நிற்க மாட்டார்கள் என கருதும் பிரமுகர்கள், அதன் பின்னர் சந்திரிகாவை அல்லது அவரது நேரடி ஆசியுள்ள ஒருவரை முன்னிறுத்தி கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பெரமுனவை ஆதரிப்பதென்ற முடிவை எடுத்திருந்தாலும், வரும் நாட்களில் சு.கவிற்குள் பெரும் பிரளயம் நிகழ வாய்ப்பிருக்கிறது.