கறுப்புப் பணம் வைத்திருப்போரை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தால் அவர்களுக்கு 85 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல கறுப்பு பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து டிசம்பர் 30-க்குள் தகவல் தெரிவித்தால் 50 சதவீத வரி விதிக்கப்படும்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வருமான வரி சட்ட (2-வது திருத்த) மசோதா 2016-ஐ தாக்கல் செய்தார்.
இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:
‘பிரதான் மந்திரி கிராபி கல்யாண் யோஜனா 2016’ (பிஎம்ஜிகேஒய்) திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன்படி, நவம்பர் 10 முதல் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வருமான வரித் துறைக்கு முறையாக கணக்கு காட்டாமல் (ரூ.2.5 லட்சத்துக்கு மேல்) தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் வருமான வரித் துறைக்கு டிசம்பர் 30-க்குள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு தாமாக தகவல் தெரிவிப்போர் 30 சதவீத வரி செலுத்த வேண்டும். இதுதவிர, கணக்கில் காட்டாத மொத்த தொகை மீது 10 சதவீதம் அபராதமும் 30 சதவீத வரித் தொகை மீது 33 சதவீத உபரி வரியும் (பிஎம்ஜிகேஒய் செஸ்) விதிக்கப்படும். அதாவது ஒட்டுமொத்தமாக சுமார் 50 சதவீத வரி செலுத்த நேரிடும்.
மேலும் கணக்கில் காட்டாமல் டெபாசிட் செய்த தொகையில் 25 சதவீதத்தை 4 ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது. இந்த காலத்துக்கு வட்டியும் வழங்கப்படமாட்டாது இதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி பின்னர் அறிவிக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி, நீர்ப்பாசனம், அனைவருக்கும் வீடு, கழிவறைகள், உள்கட்டமைப்பு வசதி, தொடக்கக் கல்வி, சுகாதாரம் ஆகிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
இதுபோல, டிசம்பர் 30-ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்காமல் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை வருமான வரிச் துறையினர் கண்டுபிடித்தால், அவர்களுக்கு 60 சதவீத வரியும் 25 சதவீத உபரி வரியும் விதிக்கப்படும். இதுதவிர, மேலும் 10 சதவீத அபராதம் விதிப்பது பற்றி வருமான வரித் துறை அதிகாரியே முடிவு செய்யலாம். இதன்படி மொத்தம் 85 சதவீத வரி செலுத்த வேண்டி இருக்கும்.
இதுகுறித்து வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறும்போது, “பிஎம்ஜிகேஒய் திட்டத்தின் கீழ் வருமானம் எப்படி கிடைத்தது என கேள்வி கேட்கப்படமாட்டாது. மேலும் செல்வ வரி, சிவில் மற்றும் இதர வரி சட்டங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதேநேரம், அன்னிய செலாவணி நிர்வாக சட்டம் (பெமா), சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டம் (பிஎம்எல்ஏ), போதைப்பொருள் மற்றும் கறுப்பு பண தடுப்புச் சட்டங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது” என்றார்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதன்பிறகு, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஏழை மக்களின் (ஜன் தன்) வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் உரிய கணக்கு காட்ட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரி மற்றும் வரி மீது 200 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் வருமான வரித் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, தங்களிடம் அதிக அளவில் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். அத்துடன் அந்தப் பணத்தை எரித்து அல்லது அழித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், வரி விகிதத்தைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.