பலாலி விமான நிலையத்தை எதிர்வரும் 17ம் திகதி திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது. இதேவேளை, இந்த நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றக்கூடாது என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
நாளை மறுநாள் (15) இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவொன்று பலாலிக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்த குழு, விமான நிலைய ஓடுபாதையை ஆய்வு செய்து, இந்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும். இந்திய தேசிய விமான சேவைகள் நிறுவனத்திற்குட்பட்ட அலையன்ஸ் ஏயார் நிறுவனமே சேவையில் ஈடுபடவுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் வாரத்தில் 7 சேவைகள் இடம்பெறவுள்ளன.
விமான நிலையத்தில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு பொறுப்பாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குடிவரவு கடமைகளிற்காக கொழும்பிலிருந்து 15 உத்தியோகத்தர்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களிற்கு காலாண்டு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் இராணுவத்தின் ஏற்பாட்டிலேயே அவர்கள் தங்கியிருப்பார்கள்.
ஒக்ரோபர் 17ம் திகதி விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்கிறார். ஜனாதிபதியும் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு அறிவுறுத்தியுள்ளதாக யாழ் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
எந்த அரசியல்வாதியும் இந்த நிகழ்வை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடாதென்றும், மீறினால் அது தேர்தல் விதிமுறை மீறலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.