திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகும் வரை பாதி முடிதான் வைத்துக்கொள்ளப்போவதாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிப்பதாக கூறி, பழை 500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென கடந்த 8ந் தேதி அறிவித்தார். இந்த ஒற்றை அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பியது. டிசம்பர் 30 -ம் தேதி வரை பழைய நோட்டுக்களை வங்கி தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒரு புறம் ஆதரவும், மற்றொரு புறம் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பல இடங்களில் ஏடிஎம்களும் திறக்கப்படாமல் உள்ளன. மேலும் வங்கிகளிலும் பணம் மாற்ற முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பதவி விலகக்கோரி கேரளாவில் முதியவர் ஒருவர் நூதன முறையில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கேரளா பல்கலைகழகத்தின் பேராசிரியர் அஷ்ரஃப் கடக்கால், என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது: கேரளாவில் துரித உணவகம் நடத்தும் 70 வயது முதியவர் யாஹியா. மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு தன்னிடம் இருந்த 23 ஆயிரம் ரூபாயை மாற்றுவதற்காக வங்கிக்குச் சென்றதாகவும், வங்கியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் நீரிழிவு நோயாளியான அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய யாஹியா தனது தலைமுடியில் இருந்து பாதி முடியை எடுத்துள்ளார். பிரதமர் மோடி ஆட்சியில் இருந்து விலகும்வரை இதுதொடரும் என அவர் சபதம் எடுத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ள அவர், யாஹியா தினமும் செய்தித்தாள் வாசிப்பவர் என்றும் எப்போதும் நைட்டி அணிந்துதான் வேலை செய்வார் எனவும் அந்த பதிவில் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.