நாம் சிறு வயது முதல் திரைப்படங்களின் முதலிரவு காட்சிகளில் பால் சொம்பு மற்றும் அலங்கரிக்கப்பட்ட மெத்தை கட்டாயம் காணப்படும் காட்சியாக இருந்து வருகின்றது. வளர்ந்து வரும் கால மாற்றத்திலும் முதலிரவன்று பால் சொம்பை எடுத்துச் செல்லும் வழக்கத்தில் மட்டும் மாறவில்லை.
காலம் காலமாக முதலிரவு சடங்கானது பால் சொம்புடன் துவங்கக் காரணம் தான் என்ன, பார்ப்போமா.?
இந்துக்கள் சடங்கு முறைகளில் பால் அருந்துவது புனிதமாகக் காணப்படுகிறது. இது, உடலைச் சுத்தப்படுத்த உதவும் கருவியாகக் கருதப்படுகிறது. இல்லற வாழ்க்கையைத் துவக்கும் இடமாக விளங்கும் முதலிரவன்று பால் அருந்தித் துவங்குவதால், அந்த வாழ்க்கை தூய்மையாகத் துவங்குகிறது எனக் கருதி வந்துள்ளனர்.
ஆதி கால மக்கள் செய்த முதல் தொழில் விவசாயம் தான். இது அனைவரின் வாழ்வாதாரமாக விளங்கி வந்தது. விவசாயத்திற்கு உதவும் பசுவை கடவுள் போலக் கருதினர். சாணம், கிருமிநாசினியாகவும், பால் பொருட்கள் உடலுக்கு வலிமை தந்து, அதன் மூலம் செல்வம் ஈட்டவும் வழிவகுத்தது. எனவே, பசுவும் அதன் மூலம் கிடைக்கும் பாலும் அதிர்ஷ்டம் என நம்பினார். எனவே, பால் அருந்தி இல்வாழ்க்கையைத் துவக்குவதால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும் என்ற எண்ணமும் நிலவி வந்தது.
உடல் அசதியாக இருக்கும் தம்பதிகளின் உடலை புத்துணர்ச்சி அடைய உதவும் பானம் பால். இது உடலில் உள்ள சோர்வை போக்கி சுறுசுறுப்பைத் தரும். மற்றும் பாலில் இருக்கும் டிரிப்டோபென் (Trytophan) எனப்படும் அமினோ அமிலம் உடலை இலகுவாக உணர உதவும். இதற்காகவும் கூடப் பால் அருந்தி வருவது முதலிரவு வழக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
குங்குமப்பூ, மஞ்சள் போன்றவை கலந்து பாலை பருகுவது பாலுணர்வை தூண்ட உதவுகிறது. இதனால், தாம்பத்தியம் சிறக்கும் என்பதாலும் முதலிரவில் பால் பருகுவது வழக்கமாகப் பின்பற்றுப்பட்டுள்ளது.
மேலும், பால் பருகுவதால், உடல் சூடு குறைகிறது. நம் நாடு மட்டுமின்றி, சில வெளிநாடுகளிலும் திருமணமான புதுமணத் தம்பதிகள் முதல் ஒரு சில மாதங்களுக்குப் பால் பருக வேண்டும் என்பதை வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.