மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தீபாவளி வர்த்தகமும் சோகையிழந்து காணப்பட்டன.
மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை அடுத்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் மண் சரிவு அபாயம் நிலவி வருவதுடன் கலுகல, பிட்டவர, கினிகத்தேனை, கடவல, வட்டவளை ஆகிய பகுதிகளிலும், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளயார்,
தலவாக்கலை, ரதல்ல, நானு ஓயா பகுதிகளிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுவதனால் இவ்வீதிகளை பயன்படுத்து சாரதிகள் மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீரேந்தும் பிரதேசங்களில் தொடரச்சியாக பெய்து அடை மழை காரணமாக காசல் ரி, கெனியோன், மவுசாகலை, லக்ஸபான மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் மிக வெகுவாக உயர்ந்துள்ளதுடன் விலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் நீர் வான்பாய்கின்றன.
எனவே தாழ் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.