தமிழகத்தின் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகணுக்கு வழங்கப்பட்டுவரும் சலுகைகளை ரத்துசெய்திருக்கிறது சிறைத்துறை நிர்வாகம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நளினி, தற்போது வேலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவரின் கணவர் முருகன் மத்திய ஆண்கள் சிறையில் சிறைத்தண்டனையை அனுபவித்துவருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி முருகன் அடைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்ததாகச் சிறைத்துறை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, உயர் பாதுகாப்பு பிரிவு மூன்றிலிருந்த முருகன் தற்போது முதல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, மேலும் இரண்டு சிம் கார்டுகளும் ஒரு ஹெட் செட்டும் கிடைத்திருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி சிறை விதிகளை மீறிய முருகனுக்கு இதுநாள் வரையில் வழங்கப்பட்டுவந்த சலுகைகள் அனைத்தும் மூன்று மாத காலம் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மனைவி நளினியை 15 நாள்களுக்கு ஒரு முறை சந்திப்பது, பார்வையாளர்கள் சந்திப்பு, விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் போன்றோருக்கு கடிதம் அனுப்புவது போன்ற அத்தனை சிறப்புச் சலுகைகளும் முருகன் செய்த குற்றத்துக்காக ரத்துசெய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.