கனடாவில் அடுத்த பிரதமருக்கான தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி 157 இடங்களை கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பிருப்பதால், அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும் வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங்குக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தற்போதை பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிட்டார்.
இவர் கனடாவின் பிரதமாக ஆன பின், ஆரம்பகாலத்தின் அந்நாட்டு மக்களிடையே பெரும் செல்வாக்கை பெற்றிருந்தார். ஆனால் அதன் பின் தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தது மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியானது இவரின் செல்வாக்கை சரித்தது.
இதனால் இந்த இரண்டு விவகாரங்களையும் முன்னிலைப்படுத்தி நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தீவிர பிரசாரம் செய்ததால் இவர் இந்த தேர்தலில் பின்னடைவை சந்திப்பார் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதுமட்டுமின்றி கருத்துகணிப்புகளிலும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி அதிக பெரும்பானமையான இடங்களை பிடிக்காது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வேட்பாளர்கள் 157 இடங்களை கைப்பற்றியுள்ளது.
எதிர்க்கட்சியான கனசர்வேட்டிவ் கட்சி வேட்பாளர்கள் 121 இடங்களிலும் பிளாக் கியூபெகோய்ஸ் கட்சி வேட்பாளர்கள் 32 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
புதிய ஜனநாயக கட்சி 24 இடங்களையும் பசுமை கட்சி 3 இடங்களையும், ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
338 இடங்களை கொண்ட இந்த நாடாளுமன்ற தேர்தலில் 170 உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ கையில் 157 எம்.பி.க்கள் உள்ளனர். அவருக்கு இன்னும் 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவை,
பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி இந்த தேர்தலை சந்தித்த புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கையில் 24 எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரது கட்சி இந்த தேர்தலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் இவரிடம் இருக்கும் எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராக பதவி ஏற்க முடியும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதற்கேற்ப, புதிய அரசு அமைய நாங்கள் ஆதரவு அளிக்க மாட்டோம். மந்திரிசபையிலும் இடம்பெற மாட்டோம் என கியூபெகோய்ஸ் கட்சி தலைவர் வேஸ் பிராங்கோயிஸ் பிலான்செட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2015-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் பெற்றதைவிட இந்தமுறை குறைவான எம்.பி.க்களை பெற்றிருந்தாலும் மக்களின் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் எழுப்புவதுடன் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவோம் என்று புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
இதனால் கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு அங்கு அமையவிருக்கும் கூட்டணி அரசியலில் இடம்பெறும் வாய்ப்பும் தற்போது இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ஜக்மீத் சிங்குக்கு கிடைத்துள்ளது.