குறைந்த சம்பளத்துக்கு பணியாளர்கள் கிடைப்பதால் அமெரிக்காவில் உள்ள பல ஐ.டி நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு இன்ஜினியர்களை சார்ந்துதான் செயல்படுகின்றன.
இதனால் அமெரிக்க இளைஞர்களின் வேலை வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்–1 பி விசாக்களை வழங்கி வருகிறது.
இந்த விசாக்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன.
குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாக்களுக்கு நல்ல மவுசு உள்ளது.
வெளிநாட்டு இன்ஜினியர்கள் பலர் கிரீன் கார்டு பெற்று, அமெரிக்காவில் நிரந்தரமாக பணியாற்ற மைக்ரோ சாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் உதவின.
அமெரிக்கா ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்குகிறது. எச்.1பி விசாவை அமெரிக்கா அதிகளவில் வழங்குவது தான், தங்களின் வேலைவாய்ப்பு பறிபோவதற்கு காரணம் என அமெரிக்கர்கள் கருதினர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் இந்த விசா விவகாரம் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்றது.
வெளிநாட்டினருக்கு அளிக்கப்படும் விசா முறையை தேர்தல் பிரசாரத்தில் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்க வேலைகள் எல்லாம் அவுட்சோர்சிங் முறையில் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு செல்வதை கண்டித்தார்.
விசா முறையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் உறுதி அளித்தார். இதற்கு டிரம்ப் ஆதாரவாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டது.குடியுரிமை சட்ட விதிமுறைகளை கடுமையாக்குவேன் என்ற வாக்குறுதியால், அரசியலில் தொடர்பு இல்லாத டிரம்ப் அதிபராக தேர்வு செய்யபட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்கும் போது அவரது உத்தரவு மூலம் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்பது தெளிவாக தெரிகிறது.
இதில் எச்1பி விசாவும் தப்பாது, விசா வழங்கியதில் முறைகேடு நடந்தால் அந்த விசா ரத்து செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.