இராணுவத்தை பாதுகாப்பதாக கூறி தமது அரசியல் செல்வாக்கை நிலை நாட்டிய ராஜபக்ச குடும்பத்தினர் இன்று என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து நிற்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பத்து வருடங்கள் யுத்தத்தை விற்று தின்ற ராஜபக்ஸ குடும்பத்தினர் இராணுவத்தினரை ஏமாற்றி வந்த நிலையில் அவர்கள் ஒருபோதும் ராஜபக்ச குடும்பத்திடம் ஏமாறவில்லையெனவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்…
தற்பொழுது நாட்டிற்கு உண்மை வெளிவந்து விட்டது.யார் யுத்தத்தை செய்தார்கள் என்பதை கோத்தபாய ராஜபக்சவே வெளிப்படுத்தி விட்டார்.நாட்டை பாதுகாப்பதற்காக செயற்ப்பட்ட இராணுவத்தளபதிக்கு இவர்கள் என்ன செய்தார்கள்.நடுவீதியில் அடித்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்தார்கள். இதுவா இராணுவத்தினர் மீது இவர்கள் வைத்துள்ள மரியாதை?கௌரவம்?
அப்படியானால் அந்த கௌரவத்தின் அடிப்படையிலா அன்று இராணுவத்தினர் கோத்தபாய ராஜபக்ஸ வீட்டு நாயை குளிப்பாட்டவும், பசில் வீட்டு தோட்ட வேலைக்கும், ராஜபக்ஸ வீட்டு பெண்களின் சேலையை கட்டுவதற்கும் உபயோகிக்கப்பட்டார்கள்.நினைப்பதற்கே நகைப்பாக உள்ளது.
கடந்த வருடம் நாம் வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதற்கு தயாராகும் போது பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசியல் சூழ்ச்சியின் மூலம் பிரதமராக அமர்ந்தார்.
நாம் நாட்டிற்கு நல்லது செய்ய முயற்சித்த அனைத்து தருணங்களிலும் எதிர்க்கட்சி என கூறிக்கொள்ளும் மஹிந்த தரப்பு எமது காலில் பிடித்து இழுத்தர்கள்.அதனை தொடர்ந்து நாம் இடைக்கால வரவு செலவு திட்டத்தையே முன்வைத்தோம்.
தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 3 மாதங்களுக்காக நாம் இடைக்கால வரவு செலவு திட்டத்தை முன்வைத்துள்ளோம். அதனை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்,அதைப் போல இன்னுமொரு பிரச்சினை.அதற்கு முகங்கொடுத்து மிகவும் கடினமாக மீண்டும் நாட்டை கட்டியெழுப்பியுள்ளோம்.
நாம் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்தியுள்ளோம்.சுற்றுலா துறையினருக்கு கடன், வட்டி போன்றவற்றை இரத்துச் செய்தோம்.2010 ஆம் ஆண்டு பாரிய வட்டிகள் மூலம் கடன்களை பெற்றார்கள்.தரகுப்பணத்திற்க்காக இவர்கள் கடன் வாங்கியுள்ளார்.
பாரிய செலவுகளை கொண்டு மத்தளையில் விமானங்கள் வராத விமான நிலையம், கப்பலே வராத ஹம்பாந்தோட்டை துறைமுகம்,கிரிக்கெட்டே விளையாடாத சூரியவெவ விளையாட்டு மைதானம், திரைப்படங்களே காட்சியாக்கப்படாத ரண்மினிருதன் திரைக்கூடம்.இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த திட்டங்களுக்கு கடன்பட்டு பாரிய செலவினை செய்துள்ளனர்.ஆனால் அக்கடனை செலுத்துவதற்கான வருமானம் இல்லை.
2005 இல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியை எடுத்துக்கொண்டால் மஹிந்த ஆட்சியில் எவ்வித சம்பள உயர்வுகளும் வழங்கப்படவில்லை.அரச சேவையில் நாமே அதனை செய்தோம், என்று தெரிவித்தார்.