இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறுபட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கடற்படையினர் தமது சித்திரவதைகளை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு பல முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றிக்கதையாக 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம் அமைந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள குறித்த அமைப்பின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, ஆனால் இது தோல்வியின் அடையாளமாக மாறிவிட்டது என குறிப்;பிட்டுள்ளார்.
கடற்படையின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளையும் திருகோணமலை முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளையும் இன்னமும் விசாரணை செய்யவில்லை என்பதுடன் குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களில் உயிருடன் உள்ளவர்கள் இன்னமும் விசாhரணை செய்யபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடற்படையின் தளபதியாகயிருந்தவர் கடற்படையின் புலனாய்வு பிரிவிற்குள் விசேட பிரிவொன்றை உருவாக்கியது கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு தெரிந்திருக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விசேட பிரிவை சேர்ந்தவர்கள் நாட்டின் மிகவும் பாதுகாப்பான கடற்படை தளத்தில் நிலத்தடி இரகசிய சித்திரவதை கூடத்தை இயக்கினார்கள். இங்கு பெருமளவு சிறைக்கைதிகள் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்த சித்திரவதை கூடத்திலிருந்து எவரையும் வெளியே கொண்டுவரமுடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக இரகசிய சித்திரவதை கூடங்களில் பலரை கடற்படையின் தலைமைக்கு தெரியாமல் வைத்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, சர்வதேச சமூகம் இனிமேலும் இலங்கை கடற்படையின் இந்த குற்றங்களை புறக்கணிக்க முடியாது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ளார்.