வயோதிப தந்தையை பராமரிக்க தவறிய 4 பிள்ளைகளையும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மன்னார் நீதிவான் அதிரடி உத்தரவிட்ட சம்பவம் இன்று நடந்தது.
அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதுடைய முதியவரை அவருடைய 4 பிள்ளைகள் பலவருடங்களாக பாராமரிக்க தவறியிருந்தனர். எனினும், தனது சுய உழைப்பிலேயே அவர் வாழ்க்கையை நடத்தி வந்தார்.
அண்மைநாட்களாக சுகவீனமுற்று, நடமாட சிரமமான நிலையில் பஸ் தரிப்பிடங்களில் இரவுநேரங்களில் உறங்குவதோடு சில நல்லுள்ளங்களின் உதவியுடன் ஒரிரு நேரம் உணவருந்தி சமாளித்து வருகின்றார்.
இதை அவதானித்த சட்டத்தரணிகள் டெனிஸ்வரன், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி கௌமிகா மற்றும் சட்டத்தரணி அன்ரனி றொமோள்சன் ஆகியோர் முதியவர் சார்பாக மன்னார் நீதவான் நீதிமன்றில் தோன்றி இன்று விசேட விண்ணப்பமொன்றினை செய்திருந்தனர்.
இந்த விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி, வயோதிபரின் முதுமை நிலை மற்றும் இயலாமையினையும் கருத்தில் கொண்டு மேற்படி முதியவரின் பிள்ளைகளான பிரதிவாதிகளை உடனடியாக மன்றில் தோன்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கிற்கு வழங்கப்போகும் தீர்ப்பானது பொற்றோரை பராமரிக்காமல் கைவிடுகின்ற பிள்ளைகளுக்கு ஓர் பாடமாக அமையவேண்டுமென சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 11ம் திகதியன்று திறந்த மன்றில் அழைக்கப்படுவதற்கு திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.