மன்னார் மாவட்டதில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இது வரை 85 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் இடம்பெயர்ந்த நிலையில் அவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர்.
மன்னாரில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மழை நீர் வடிந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்துள்ளது.
குறிப்பாக மன்னார் ஜீவபுரம், ஜிம்றோன் நகர், சாந்திபுரம், எமில் நகர் சாவற்கட்டு, எழுத்தூர் போன்ற பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக நிரம்பியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக மக்கள் தங்கள் வதிவிடங்களை விட்டு வெளியேறிய நிலையில் மன்னார் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அங்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் தாழ்நிலக் கிராமங்களில் வசிக்கும் ஏனைய மக்களும் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.