யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக இந்தியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பொலிஸார் வேதாரண்யம் கோடியக்கரை கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் படகில் இருந்து இறங்கி வந்த 3 பேரை பிடித்து ஆறுகாட்டுதுறை மீனவர் கிராமத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இலங்கை வெல்வெட்டித்துறையை சேர்ந்த அந்தோணி (வயது45), அந்தோணிமுத்து (58), கோயம்புத்தூரை சேர்ந்த பிரான்சிஸ் (39) ஆகியோர் என தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருந்து படகில் வந்த அவர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை என்பதும், சட்ட விரோதமாக தமிழகத்துக்குள் ஊடுருவ முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பொலிஸார் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி நடத்திய விசாரணையில்,
கோயம்புத்தூரை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, அங்கு தன்னை இலங்கை அகதி என கூறி பதிவு செய்துள்ளார்.
இதன் காரணமாக பிரான்ஸ் அதிகாரிகள் பிரான்சிசை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து பிரான்சிஸ், இலங்கை வெல்வெட்டித் துறையை சேர்ந்த அந்தோணி, அந்தோணிமுத்து ஆகிய 2 பேரின் உதவியுடன் படகில் உரிய ஆவணங்கள் இன்றி வந்ததும் தெரியவந்தது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரான்சிஸ் பிரான்ஸ் சென்று இலங்கை அகதி என ஏன் பதிவு செய்தார்? எதற்காக இலங்கை சென்றார்? தமிழகத்துக்கு மீண்டும் வந்ததன் நோக்கம் என்ன? என்பது பற்றி பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.