இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்றபோது 2009 மே 14 ம் திகதியே தனது தந்தையை தான் இறுதியாக பார்த்தாக முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி கலையரசி கனகலிங்கம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
தமிழர் இனப்படுகொலை குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரிட்டனின் பொதுச்சபைக்கு ஆற்றிய உரையில் கலையரசி கனகலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.
தனது தந்தையை இறுதியாக பார்த்தது குறித்து உரையாற்றிய சிறுமி கலையரசி, தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது ஏன் அவசியமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2009 ம் ஆண்டே தனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான வருடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதுதான் தான் தனது தந்தையை இறுதியாக பார்த்தேன்,எனது தந்தையை விட்டு பிரிந்த அந்த நிமிடம் இன்னமும் எனக்கு வேதனையை ஏற்படுத்துகின்றதாகவும் கூறிய கலையரசி , அச்சமாகஉள்ளது வாருங்கள் என தந்தையை அழைத்தபோது , அவர் தன்னை விட்டு போகவேண்டியிருந்ததாகவும் கலையரசி கனகலிங்கம் குறிப்பிட்டுள்ளார்,
அத்துடன் அங்கு ஏனைய பல சிறுவர்களும் தங்கள் தந்தைகளிற்காக அழுதுகொண்டிருந்ததை நான் பார்த்ததாகவும், எனது தந்தையின் கழுத்தை இறுக்கி அணைத்தபடி அழுதபோது, அவர் எனக்கு முத்தமிட்டுவிட்டு விலகிச்சென்றார் எனவும் கலையரசி குறிப்பிட்டுள்ளார்.
நான் தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் அதேவேளை தனது தாய், தந்தை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற துயரத்துடன் வாழ்கின்றார் என்றும்,ஒவ்வொரு நாளும் தாங்கள் துயரத்தை மறைத்துவிட்டு அவருடைய வருகைக்காக காத்திருக்கின்றோம் எனவும் கலையரசி தெரிவித்துள்ளார்.
தனது தந்தையை பார்ப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் எனது உறவினர்களுடன் நான் பதுங்குழிக்குள் இருந்தபோது, தெரிந்த சிறுவன் ஒருவன் சைக்கிள் ஒடுவதை பார்த்து அவனை கூப்பிட எண்ணியபோது, படையினரின் எறிகணை எங்களிற்கு அருகில் விழுந்து வெடித்ததில், அந்த சிறுவன் தூக்கியெறிப்பட்டான் எனவும் கலையரசி தெரிவித்துள்ளார்.
விமானக்குண்டுவீச்சினால் எனது இரு உறவினர்கள் கொல்லப்பட்டனர்,தன்னால் அதனை மறக்க முடியாது என்றும் ,குண்டு பதுங்குழியின் மேல் விழுந்ததால் தனது உறவினர்கள் அதற்குள் சிக்குண்டதாகவும் கலையரசிமிகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்றும் ,தனது தந்தைக்கு என்ன நடந்தது என்ற கேள்வியுடன் நான் ஒவ்வொருநாளும் போராடுகின்றேன் என்றும் அவர் கவையுடன் கூறியுள்ளார்.
மேலும் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரிப்பது தனது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவராது என்றும், ஆனால் தனது தந்தைக்கும் காணாமல்போன ஏனையவர்களிற்கும் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் எனவும் கலையரசி கனகலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.