நடப்பது ஜனாதிபதித் தேர்தல், அனைத்து பிரதேச மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மதிப்பளித்து பிரசாரங்களில் கலந்து கொள்வதுதான் ஒரு தரமான வேட்பாளரின் கடமை.
கிழக்கு மாகாணத்தை மூலதனமாக்கித்தான் மொட்டுக் கூட்டத்தினர் நாட்டில் கட்சி வளர்த்தனர். ஏப்ரல் 21 க்கு முந்தைய அரசுக்கு எதிரான அவர்களின் பிரச்சாரம் முழுக்க கிழக்கை மையப்படுத்தியே இருந்தது. எனில் மொட்டின் வேட்பாளர் கோத்தபாய மட்டுமல்ல விமல் வாசுதேவ தினேஷ் குணவர்த்தன என முழு மொட்டுப் பட்டாளமும் கிழக்கு மக்களுக்கு மதிப்பளித்து களம் கண்டிருக்க வேண்டும் இம் முறை.
மட்டுமல்ல, ஏப்ரல் 21 குண்டு வெடிப்பின் பின் குற்ற உணர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் அச்சத்துக்கும் ஆளாகியிருக்கும் மண் கிழக்கு. நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான இன அடக்குமுறைகளுக்கு கோத்தபாய தரப்பையே காரணம் காட்டிக் கொண்டிருக்கும் இந்நிலையில் வெள்ளை வேன் அது இது என முஸ்லிம் மக்கள் மத்தியில் கோத்தபாயவுக்கு எதிரான அச்சத்தை விதைக்கும் பிரச்சாரங்களும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் வேளையில்,
அவர்கள் வந்து இம் மக்களைச் சந்தித்து புன்னகைத்து, அச்சத்தில் உறைந்து போயிருக்கும் அவர்களை ஊக்கப்படுத்தி எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வாக்குறுதியாககக் கொடுத்து, இம் மக்களின் நம்பிக்கையை வெல்ல பிரயத்தனங்களை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் கிழக்கு மொட்டுக் கட்சியால் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது. நாளை ஜனாதிபதியானால் வாக்குக் கேட்டு வந்தது நானல்ல எனது சகோரரன் தான் உங்கள் பிரச்சினைகளை அவரிடம் முறையிடுங்கள் என கோத்தபாய அதிகாரத்தில் வெறுத்து ஒதுக்கலாம் என்பற்கான அறிகுறியே இது. மகியங்கணை வரைக்கும் வந்து போகலாம் கோத்தபாயவால் எனில் ஏன் கிழக்குக்கு முடியாது.
அனைத்து மக்களுக்கும் மதிப்பளித்தே தனது பிரச்சார நேரங்களை ஒதுக்கியிருக்க வேண்டும் அவர். நேரமில்லை, அதை விட முக்கிய விடையம் இருந்தது போன்ற புருடா எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடையமல்ல. கிழக்கை விட முக்கியமானது எது அவர்களுக்கு.
கோத்தபாய மட்டுமல்ல சம்பிக்க அல்லது ஞானசார இம்முறை போட்டியிட்டிருந்தாலும் ஒரு உள்ளூராட்சி சபைக்காக நாக்கைக் தொங்கப் போட்டிருப்பார்கள் சாய்ந்தமருது மக்கள். போன தேர்தல்களிலெல்லாம் மஹிந்த தரப்புக்கு எதிராக கூவிக் கூவி புள்ளடியிட்டவர்கள். ஆனால் அக்கரைப்பற்று அவ்வாறல்ல.
நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அதாவுல்லாஹ் எனும் தனது தலைவனின் நிலைப்பாட்டை பின்பற்றி எந்தவித எதிர் பிரச்சாரங்களுக்கும் மயங்காது மஹிந்த ராஜபக்சவை நாட்டின் தலைவனாக ஏற்றுக் கொண்ட ஊர்.
மஹிந்த அநியாயமிளைப்பினும் செய்த நன்மைகளுக்காக அவருக்கு துணை நிற்போம் எனும் நிய்யத்தில் இருக்கும் ஊர். அவருக்காக பிரார்த்தித்த ஊர். அவருக்கான தனது அரசியல் அதிகாரத்தை இழந்த ஊர். இன்று வரைக்கும் அக்கரைப்பற்றின் பெரும்பான்மை மக்கள் மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கின்றனர். எங்கு போகத் தவறியிருப்பினும் கோத்தபாய அக்கரைப்பற்றில் கால் வைத்திருக்க வேண்டும்.
கொழும்பு முஸம்மிலையும் இன்னும் சில அடிவருடிகளையும் கொண்டு வந்து கிழக்கில் மொட்டு செய்யும் அரசியலை புரியாதவர்கள் அல்ல கிழக்கு மக்கள். பெருந் தவறிழைத்து விட்டார் கோத்தபாய.