கல்வியையும், அறிவையும் மையப்படுத்திய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி அதனூடாக நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்வதற்குத் திட்டமிட்டிருக்கும் நாம் நவீன தகவல் தொழில்நுட்பத்தை அனைத்து இளைஞர், யுவதிகளிடமும் கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் நவீன தொழில்நுட்பத்தை விஸ்தரித்தமையின் காரணமாகவே வெகு சீக்கிரத்தில் அபிவிருத்தி அடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று ஹக்மன நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரைற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை அரசியல் தலையீடுகளற்ற, நாட்டை மாத்திரம் கருத்திற்கொண்டு சேவையாற்றும் புலனாய்வுப்பிரிவை ஸ்தாபித்து பாதுகாப்பை வலுப்படுத்துவோம்.
பாதுகாப்புப் பிரிவினருக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படும். அதற்கான சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கான பாதுகாப்பு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவை நியமிப்போம் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.