வவுனியாவில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி சென்றவர்கள், அதற்குரிய பணத்தை கொடுக்காமல் சாரதியை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியான 51 வயதான பா.சிறிதரன் என்ற குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திய இளைஞர்கள் மூவர், வவுனியா வேப்பங்குளம் 6 ஆம் ஒழுங்கை பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலடியில் சென்று இறங்கியுள்ளனர்.
அங்கு சென்ற பின்னர் இளைஞர்கள் பயணம் செய்தமைக்கான வாடகை பணமான 250 ரூபாயை முச்சக்கரவண்டியின் ஓட்டுனர் கேட்டுள்ளார்.
இதன்போது பணத்தை தர முடியாது என கூறிய குறித்த இளைஞர்கள் முச்சக்கர வண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதோடு முச்சக்கர வண்டியையும் சேதமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற ஏனைய முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் அவசர பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சாரதியை தாக்கியதாக தெரிவிக்கப்படும் இளைஞனை கைது செய்ததுடன் அவரிடமிருந்து கூரிய ஆயதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதுசெய்யபட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டிருந்ததவர் என தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.