எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை விட 20 இலட்சம் வாக்குகளால் பொதுஜன முன்னணியின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறுவார் என்று அவரது ஜோதிடர்களில் ஒருவரான வை.ஏ.காமினி டயஸ் யாப்பா எதிர்வு கூறியுள்ளார்.
ககன சகோதர இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது அவர் இதனைக் கூறினார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனிடையே வாக்களார் அட்டை விநியோக செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ச, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க ஆகியோர் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொழும்பு கலையகத்தில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவின் சோதிடர்களில் ஒருவரான வை.ஏ.காமினி டயஸ் யாப்பா, ஐ.பி.சி தமிழின் சகோதர ஊடகமான ககனவிற்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.
தேர்தல் தொடர்பில் ஜோதிடர் தெரிவித்திருப்பதாவது,
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தற்போது அரசியல் நெருக்கடியை சந்தித்துள்ளார். அவரது மேடைப் பேச்சுக்களைப் பார்க்கும் போது இது புரிகின்றது. கோட்டாபய ராஜபக்ச இந்த தேர்தலில் போட்டியிடாதிருந்தால் சஜித் பிரேமதாஸ நிச்சயமாக வெற்றிகொள்ள முடிந்திருக்கும். இந்நிலையில் அவர் தற்போது போட்டியிடுவதால் எனது ஆய்வுகளுக்கு அமைய கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறுவது நிச்சயமாகும்.
ஆய்வுகளுக்கு அமைய சஜித் பிரேமதாஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரது ஜாதகக் குறிப்பை ஒப்பீடு செய்து பார்க்கும் போது கடந்த தேர்தலில் மொட்டுக்கட்சி பெற்ற வெற்றியின் பிரகாரம் 70 இலட்சத்திற்கும், 60 இலட்சத்திற்கும் இடையிலான வாக்குகளை கோட்டாபய ராஜபக்சவினால் பெற்றுக்கொள்ள முடியும். 40 இலட்ச வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு சஜித் பிரேமதாஸ மிகுந்த சிரமப்பட வேண்டிவரும்.
இதுதான் எனது ஆய்வின் முடிவாகும். ஆகவே 20 இலட்ச வாக்குகளால் கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைவதற்கான சாத்தியம் உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவாவார். அதேவேளை, கோட்டாபய, பெசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரது வாழ்கைக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதால் ஆபத்தும் நேரிடலாம். ஆகவே அவர்களது பாதுகாப்புக்கு அவர்கள் இன்னும் கரிசனை கொண்டு அதிகரித்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.