போர்த்துகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் செதுபால் நகரில் உள்ள மருத்துவமனையில் முகம் இல்லாமல் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
கடந்த 7 ஆம் திகதி பெண் ஒருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குழந்தையை பிரசவித்த பெண் கர்ப்ப காலத்தின் 6ஆவது மாதத்தில் ஒருமுறை ஸ்கேன் எடுத்துள்ளார். அப்போது, குழந்தைக்கு குறைபாடு இருக்கலாம் என பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், கவலைப்பட ஏதுமில்லை என்று வைத்தியர் ஆர்ட்டர் கெர்வெல்ஹோ கூறியிருந்ததனால் பெற்றோரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே கடந்த 7ஆம் திகதி பிறந்த அந்த குழந்தை முகம் இல்லாமல் பிறந்திருந்தது. அதாவது, கண், மூக்கு, வாய் என்று முகத்தில் உள்ள உறுப்புகள் எதுவுமே அந்த குழந்தைக்கு இல்லை. மேலும், குழந்தையின் மண்டையோட்டின் ஒரு பகுதியே சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் குறித்த குழந்தை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மகப்பேறு வைத்தியரான ஆர்ட்டர் கெர்வெல்ஹோ என்பவரின் அலட்சியத்தாலேயே குழந்தை இப்படி குறைப்பாட்டுடன் பிறந்தது தெரியவந்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
நிலமை அவ்வாறு இருக்கையில், பிறந்த குழந்தை சில மணி நேரங்களுக்கு மட்டுமே உயிருடன் இருக்கும் என அதன் பெற்றோர் நினைத்தனர். ஆனால் 2 வாரங்களுக்கு மேலாகியும் மருத்துவமனை பாரமரிப்பில் குழந்தை உயிருடன் இருக்கிறது எனவும் அந்த குழந்தைக்கு ரொட்ரிகோ என பெயரிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வைத்தியர் ஆர்ட்டர் கெர்வெல்ஹோ மீது ஏற்கனவே இதே போல் 6 புகார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் 6 மாதம் மருத்துவ பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.