2015ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளையும் தமது ஆட்சியில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பண்டாரவலையில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “நாம் வேலை செய்துக்காட்டியுள்ளோம். எமக்கான ஒரு நோக்கமுள்ளது. கொழும்பு மட்டுமன்றி, பண்டாரவலை, பதுளை, காலி, கண்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நாம் எமது அபிவிருத்திப் பணிகளை செயற்படுத்தினோம்.
எனினும், இவற்றை நிறைவு செய்ய எம்மால் முடியாது போனது. 2015ஆம் ஆண்டு தோல்வியடைந்தமையால், மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது போனது.
எவ்வாறாயினும், நாம் எமது செயற்பாடுகளை அடுத்த வெற்றியின் ஊடாக மீண்டும் ஆரம்பிக்கவே எதிர்ப்பார்க்கிறோம். இதற்காக மக்கள் எம்மீது நம்பிக்கைகொள்ள வேண்டும்.
அத்தோடு, இராணுவத்தினரைபோன்று சிவில் பாதுகாப்புத் தரப்பினரது சம்பளத்தையும் நாம் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தொழில்நுட்ப வளர்ச்சிதான் எமது அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆகும். இதற்காக இளைஞர்- யுவதிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
இதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்பதோடு, 3 இலட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புக்களையும் வழங்க முடியும்” என மேலும் தெரிவித்தார்.