நேற்று மாலை வேளையில் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இஷாரா புடவைக் கடைக்கு முன்னால் ஓர் தாய் ஓர் கைக்குழந்தையுடன் ஊதுபத்தி விற்றுக்கொண்டிருந்தார். என்னிடமும் ஊதுபத்தி வாங்கிக் கொள்ளுமாறு 04 ஊதுபத்திகளை நீட்டினார்.
அவரிடமிருந்து ஒரு ஊதுபத்தியை நூறு ரூபாய் பணம் கொடுத்து வாங்கி விட்டு மிகுதி மூன்று ஊதுபத்தியையும் அவரிடமே கொடுத்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.
பத்து நிமிடங்களின் பின்னர் அந்த இடத்தில் அத்தாய் மட்டுமே ஊதுபத்தி விற்று கொண்டிருந்தார்.முன்னர் அவரோடு அனைத்தபடி இருந்த கைக் குழந்தையை காணவில்லை.
எனக்கு மனதில் பல வினாக்கள் எழ சந்தேகத்தில் அத் தாயிடம் பேச்சுக்கொடுத்தேன். பல திடுக்கிடும் தகவல்கள் சில நிமிடங்களில் வெளிவந்தன.
இத் தாய் ஆரம்பத்தில் தனது இடம் வவுனியா என்றார். பின்னர் சரமாரியாக துருவி துருவி விசாரித்ததில் தனது சொந்த ஊர் புத்தளம் என குறிப்பிட்டார்.
அத்தோடு இவரது கணவரை பற்றி மேலும் மேலும் விடாது விசாரித்த போது கணவர் பிள்ளையை தூக்கியபடி 200மீற்றர் தொலைவில் இருந்தார்.
இவர்களுடன் பல பெண்களும் ஊதுபத்தி விற்பனை என்ற போர்வையில் வந்துள்ளைதை இனங்கண்டோம். அவர்களை விசாரிக்க முற்பட்ட வேளை அவர்கள் நொடிப்பொழுதில் ஆட்டோவில் ஏறி நகர்ந்து விட்டார்கள்.
இத் தாயின் கணவனது மோட்டார் வண்டியில் 02 ஊதுபத்தி பெட்டிகள் கட்டப்பட்டு காணப்பட்டன. எந்தவொரு நோய் நிலைமையும் இல்லாத இவர்களின் இச் செயற்பாடு மிகுந்த சந்தேகத்தை வரவழைத்தது.
“உங்களுக்கு வறுமை என்றால்” அதை இனம் காணும் பட்சத்தில் நாம் உங்களுக்கு உதவுகின்றோம் என்று கூறியும் எமது வார்த்தையை ஓர் பொருட்டாக கூட பார்க்கவில்லை.
ஒன்றில் இவர்கள் கைக்குழந்தையை வைத்திருந்து ஊதுபத்தி விற்று நாளொன்றிக்கு பல ஆயிரம் ரூபாய் பணம் திரட்டுகிறார்கள்.
அல்லது சமூக விரோத செயற்பாடுகள் எதிலும் ஈடுபடுகின்றார்களா ….??
அல்லது ஊதுபத்தி விற்பனை என்ற போர்வையில் யாரையும் கண்காணிக்கின்றார்களா…???
இவர்களிடம் இருக்கும் குழந்தை இவர்களுடையது தானா….?? என்ற பல சந்தேகங்களுடன் சாதாரண மனிதனாக அவ்விடத்தை விட்டகன்றேன்.