இலங்கையில் தற்போது மது பிரியர்களால் அரசாங்கத்திற்கு கிடைக்கின்ற வருமானம் எவ்வளவு என்பது குறித்த தகவல் ஒன்று பிரபல தமிழ் ஊடகவியலாளரின் முயற்சியினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
வருடம் மதுவரி வருமானம் (ரூ)
2013: 66,008,326,747
2014: 69,087,998,769
2015: 105,263,548,521
2016 : 120,238,067,703
2017: 113,214,008,524
2018 : 113,890,332,214
இலங்கையில் மொத்தமாக வெளிநாட்டு மதுமொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், மதுபான உரிமம் உள்ள ஹோட்டல்கள், ஹோட்டல்பார், சிற்றுண்டிச்சாலை, வாடி வீடு, மதுபான தவறணைகள் என மொத்தமாக 3413 மதுபானநிலையங்கள் உள்ளன.இதில் முதலிடத்தில் மேல் மாகாணம் உள்ளது.
இங்குள்ள மூன்று மாவட்டங்களில் கொழும்பில்- 804, கம்பஹாவில் 526, களுத்துறையில் 198 என மொத்தமாக 1528 மதுபானசாலைகள் உள்ளன.
இரண்டாவது இடத்தில் மத்திய மாகாணம்
அதிக மதுபானசாலைகள் உள்ள இரண்டாவது மாகாணமாக மத்திய மாகாணம் விளங்குகிறது. இம்மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 289, நுவரெலியா மாவட்டத்தில் 234, மாத்தளை மாவட்டத்தில் 137 என மொத்தமாக 660 மதுபானநிலையங்கள் உள்ளன.
குறைவான மாவட்டம் கிளிநொச்சி
மிகவும் குறைவான மதுபானசாலைகள் உள்ள மாவட்டமாக கிளிநொச்சி விளங்குகிறது. இங்கு அனுமதி பத்திரம் பெற்ற 4 மதுபானசாலைகள் மாத்திரமே உள்ளன.எனினும், 2018 ஆம் ஆண்டு வரை இங்குள்ள உரிமம் பெற்ற கள்ளுத்தவறணைகளின் எண்ணிக்கை 50 ஆகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 மதுபானநிலையங்களும் 24 கள்ளுத்தவறணைகளும் உள்ளன.
2018 இல் எத்தனை அனுமதி பத்திரங்கள் ?
2018 ஆம் ஆண்டில் எத்தனை மதுபானவிற்பனை நிலையங்களுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கப்பட்டது என்ற எமது கேள்விக்கு 74 என பதிலளித்துள்ளது இலங்கை மதுவரித் திணைக்களம். இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாகி நாடாளுமன்றம் வரை எதிரொலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.